வைகுண்ட ஏகாதசி


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வரும் மார்கழி வருகிறது, வைகுண்ட ஏகாதசி:

வாசுதேவனின் பாதம் பணிவோம்.
வைகுண்ட ஏகாதசியன்று சிறிய வைணவக் கோயில்களில்கூட, அக்கோயிலைச் சுற்றியுள்ள பக்தர்கள் குடும்பம் குடும்பமாக, பரமபத வாசல் வழியாக வந்து அலங்கரிக்கப்பட்ட பெருமாளையும் தாயாரையும் வணங்கிச் செல்ல நீண்ட வரிசையில் நிற்பது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் உபவாசம் இருப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசியின் உபவாச விதிகள்தான் என்ன?

சூரிய உதயத்திற்கு முன் விடியற்காலையில் எழ வேண்டும். ஸ்நானம் செய்ய வேண்டும். நித்தியப்படி பூஜைகள் செய்ய வேண்டும். ஏகாதசியின் முதல் நாள் தசமி அன்று ஒரு பொழுது உண்ண வேண்டும். ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உட்பட நோயாளிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் துளசி கொண்டு பெருமாளைப் பூஜிக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் துளசியை பறிக்கக் கூடாது என்பதால் முதல் நாளே துளசியைச் ஸ்வீகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

துவாதசியன்று விடியற்காலையில் பாரணை (உணவு) செய்துவிட வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக் கனி ஆகியவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். ஏகாதசி திதி என்பது ஒரு நாள் என்றாலும், முதல் நாள் தசமியையும், மறுநாள் துவாதசியையும் இணைத்தே கூறப்படுவதால், இதனை மூன்று நாள் உபவாசம் எனலாம்.

ஏன் சாப்பிடக் கூடாது?

உலகில் மூடப்படாத தொழிற்சாலை சமையலறை. ஓயாது வேலை செய்வது வயிறு. ஆண்டின் அனைத்து நாட்களிலும் இவை இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. மனித கவனமும் பெரும்பாலான நேரம் இதற்கே செலவழிகிறது. ஏகாதசியன்று மட்டும் இந்தத் தொழிற்சாலையை மூடிவிட்டால், பக்தர்களுக்குப் பெருமாளிடம் 100 சதவீதம் கவனம் வந்துவிடும்.

சாப்பிடாவிட்டால் உடல் நலம் கெட்டுவிடாதா?

இத்தகைய உபவாசத்தினால் உடல் கேடொன்றும் ஏற்படாது. சாப்பிடும் சுழற்சியில் இந்த சிறிய இடைவெளி உடலைச் சுத்தம் செய்கிறது. மறுநாள் நெல்லிக்கனி கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். இதனால் சிறு குடலும், பெருங்குடலும், சீர் பெறும் என்பார்கள்.

ஏகாதசி விரதம் கடைபிடிக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

உயிர் வாழத்தான் அன்னம். எனினும் விரத காலத்தில் அன்னத்தைத் தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது இயலாதவர்கள் வருந்த வேண்டியதில்லை. விரதம் இருக்க வேண்டிய நாட்களில் நாக்கு ருசிக்கு இடம் கொடாமல் தேவைக்கு மட்டுமே கொஞ்சமாக உண்ண வேண்டும். மற்ற நேரங்களில் இறைவனின் திருநாமத்தை மனமும் வாக்கும் ஒன்று சேர உச்சரிக்க வேண்டும்.

உபவாசம் என்றால் என்ன என்பது பற்றி ஸ்ரீமத் பாகவதத்தில் சுவையான கதை ஒன்று உள்ளது.

பிருந்தாவனத்தில் இருந்த கோபியரில் சிலர் மோரும், தயிரும், வெண்ணையும் விற்க, காலையிலேயே அக்கரைக்குச் சென்றனர். மாலை திரும்பியபொழுது, யமுனையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

அப்பெண்களோ யமுனையைத் தாண்டி அக்கரைக்குச் செல்ல வேண்டும். இவர்கள் வந்திருந்த பகுதியில் பாலம் ஏதும் இல்லை. பாலத்தை அடைய வேண்டுமென்றால், ஊரைச் சுற்றிக்கொண்டு போக வேண்டும். நேரமோ மாலைப் பொழுது. இருட்டிக்கொண்டு வருகிறது.

திகைத்த அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே வியாசர் தவத்தில் இருந்ததைக் கண்டார்கள். முனி புங்கவரான அவர் உதவக்கூடும் என்று நினைத்து அவரிடம் அபயம் கேட்டார்கள். அவரும் தவம் கலைந்து, ஒரு நிபந்தனையுடன் உதவுவதாக வாக்களித்தார்.

கோபியர்களின் பானைகளில் மீந்துள்ள மோர், தயிர், வெண்ணை ஆகியவற்றைச் சாப்பிடக் கேட்டார். மழை காரணமாக ஒன்றும் விற்காததால் மொத்தத்தையும் அவர்கள் வியாசரிடம் கொடுத்தார்கள். அவருக்கு நெடுநாள் பசி போலும்; எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டார். உண்ட களைப்பு தீரக் கால் நீட்டிப் படுத்துவிட்டார்.

கோபியர் அவரை எழுப்பி, உதவுகிறேன் என்று சொல்லி அனைத்தையும் சாப்பிட்டீர்களே, குழந்தைகள் காத்திருப்பார்கள் தயவுசெய்து உதவுங்கள் என்றனர். வியாசரும் நதியின் அருகே சென்றார்.

“யமுனையே, நான் நித்ய உபவாசி என்றால் விலகி வழி விடு” என்றார். கணப் பொழுதில் யமுனை ஆற்று நீர் விலகி வழிவிட்டது. பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் கோபியர் வாய் திறவாமல் அவரைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பாக யமுனையைத் தாண்டியாகிவிட்டாயிற்று என்று தெரிந்ததும் அவரைப் பார்த்துக் கேட்டார்கள்.

“முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா? எங்களிடம் இருந்ததையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, நித்ய உபவாசி என்பது உண்மையானால் என்று யமுனையிடம் கூறினீர்களே. அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழி தந்துவிட்டாளே?” என்றார்கள். வியாசர் சிரித்தபடியே, “உப என்ற சொல்லுக்கு அருகில் என்று பொருள். வாசம் என்றால் வசிப்பது, இருப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்யமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் நித்ய உபவாசி” என்றார்.

கண்ணனுக்கு அருகில் இருக்கும் அளவுக்குத் தவ வலிமை கொண்டவர் வியாசர். சாதாரண மானிடர்களுக்கு அது அத்தனை சுலபமல்ல. எனவே வைகுண்ட ஏகாதசியன்று உண்ணாமல், உறங்காமல்,

கண்ணனை எண்ணி, அவன் அருகே இருப்பதாகப் பாவித்துக்கொண்டு கடைப்பிடிக்கும் விரதத்தை நாம் உபவாசம் என்று அழைக்கிறோம்.

கோபத்தில் உங்கள் அன்பையும்,
மெளனத்தில் உங்கள் வார்த்தைகளையும்,எவர் புரிந்து கொள்கிறார்களோ
அவர்களே உங்களுக்காக படைக்கப்பட்ட உண்மையான உறவுகள்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »