கோமடி சங்கு கோடி நன்மை தரும் கோமடி சங்கு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கயிலையில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, கூடிய கூட்டத்தால் உலகம் சமநிலை இழந்தது.

அதனை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் ஈசன்..

திருமண வைபவத்தைக் காணும் பாக்கியம் தனக்கு இல்லையே என்று அகத்தியர் நினைக்க, அவருக்கு விருப்பமான இடத்திலெல்லாம் மணக்கோலம் காட்டியருள்வதாகச் சொன்னார் மகேசன்.

பூவுலகம் வந்து உலகை சமநிலைப்படுத்தியதும் அகத்தியர் ஒவ்வொரு தலமாக இறைவனை தரிசித்துக் கொண்டும், சில இடங்களில் தவத்தை மேற்கொண்டும் வந்தார். அப்படியொரு நாள், மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் குமரக் கடவுளை தரிசிக்க வருகிறார். அவருக்கு முருகன் வள்ளி, தெய்வானை சமேதராகவும், ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி அம்சமாகவும் தெற்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். பெரும்பேறு கண்டிகை என்ற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கும் சிறிய மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் தலமே அது.

பின்பு அகத்தியர் அங்கிருந்து மேற்குப் புறத்தில் சுயம்பு மூர்த்தமாக, மணல் லிங்கத்தில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து, அத்தலத்துக்கு அருகிலேயே தவத்தை மேற்கொள்கிறார். அப்படி அவர் தவம் செய்து கொண்டிருக்கும் நாளில், சித்ரா பௌர்ணமி தினம் வருகிறது. அப்போது தான்தோன்றீஸ்வர பெருமானை, இன்று இங்கு தங்களின் திருமணக் கோலத்தை காண்பித்தருள வேண்டும் என வேண்டுகிறார்.

உடனே உமாமகேஸ்வரன் தனது திருமணக்கோலத்தைக் காண்பித்து அருள்பாலிக்கிறார். இப்படி இறைவன் அகத்தியருக்குக் காட்சி தந்த தலம்தான், தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீசுவரர் திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மணல்லிங்க வடிவில் ஆரம்பத்தில் இருந்து வந்தார். அபிஷேகம் செய்ய வசதியாக செப்புக் கவசம் அணிவிக்க இறைவன் இசைந்து அருள்புரிந்தாராம். அதன்படி தற்போது லிங்கத்தின் மீது செப்புக் கவசம் மாட்டப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் இரண்டாயிரம் வருடங்களைக் கடந்து நிற்கும் இவ்வாலயத்திற்கு பல்லவ பேரரசர்களும், சோழ மன்னர்களும் ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் தான்தோன்றீஸ்வரர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி அன்னை உமாதேவியார் தடுத்தாட்கொண்ட நாயகியாக அருள்பாலிக்கின்றார்.

சுற்றுப்பிராகாரத்தில் தனிச்சன்னதியாக தெற்கு புறத்தில் வடக்கு நோக்கி ரண பத்ர காளி சன்னதி அமைந்துள்ளது. திருவக்கரை வக்ரகாளியே இங்கு ரணபத்ரகாளியாகக் காட்சி கொடுக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரு அசுரர்களை தேவர்கள் வேண்டுகோளின்படி அழித்த தேவி இவள்தானாம்.

இந்த ரணபத்ரகாளியை விக்கிரமாதித்தனும், பட்டியும் தரிசித்து வழிபட்டதாகவும், அதன் பிறகுதான் உறையூர் சென்று வெக்காளியம்மனை அவர்கள் தரிசித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம்.

இந்தக் கோமடி சங்கை சாட்சாத் பரமேஸ்வரியின் ஸ்வரூபமான கோ(பசு) மடி, அதாவது பசுவின் மடிபோன்ற அமைப்பில் உருவாவது. இந்தக் கோமடி சங்கு இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தோன்றி சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலிருக்குமாம்.

இந்த கோமடி சங்கால் சுத்த பசும்பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தோமானால் பரமேஸ்வரியே பரமேஸ்வரனுக்கு பாலபிஷேகம் செய்தது போன்றதாகுமாம். இதைச் செய்வோருக்கும், தரிசிப்போருக்கும் பல கோடி நன்மை கிடைக்கும் என்பதை திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள ஓலைச்சுவடியில் காணலாமாம்.

இத்தலத்தின் தலவிருட்சம் திருஆத்தி மரமாகும். இத்தலத்தில் வடக்கில் காணப்படும் இம்மரத்தின் கீழ்தான் அகத்தியர் தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாம்.

சுற்றுப்பிராகாரத்தின் மேற்கில் கனக துர்க்கை புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். அருகே ஒரு மான் நிற்க, எருமைத் தலையை மிதித்தபடி சுற்றிலும் கிளி, பட்டி, வேதாளம் மற்றும் சங்கு சக்கர கதாயுதத்துடன் காட்சி தருவது விசேஷமான வடிவம் ஆகும். இந்த கனகதுர்க்கை பித்ரு தோஷம் நீங்க அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது.

காலத்தைக் கடந்து நிற்கும் தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருத்தலத்துக்கு குடும்பத்தோடு வந்து தரிசியுங்கள். பல அதிசயங்களை தன்னுள் கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தை அடுத்து தொழுபேடு என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் வடக்கில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »