திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா – Tiruchendur-Subramanya-Swami-Temple


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து, பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினிலாரி போன்ற வாகனங்களில் முருகப்பெருமானின் உருவப்படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »