அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*அரிசியில் ஏன் அன்னபூரணியை வைத்து வழிபடுகின்றோம் என்பது பற்றி:*

நாம் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாத்தியம் சேர்ப்பது எதற்காக என்று கேட்டால், அது “இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தான்” என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை. நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் உணவு அவசியம். அந்த உணவினை நமக்காக படைத்துக் கொண்டிருப்பவள் தான் அன்னபூரணி தேவி. ஒரு கையில் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமும் மற்றொரு கையில் தங்கக் கரண்டியும் ஏந்தி காட்சி அளிக்கின்றாள்.

அன்னபூரணியை எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், அன்னபூரணி அவதரித்ததைப் பற்றிய சின்ன வரலாற்றையும் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம்.

காசி மாநகரத்தில் தான் அன்னபூரணியின் திருக்கோவில் உள்ளது. ஒரு முறை சிவபெருமான் ஏகாந்த நிலையில் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவனின் கண்களை மூடி விட்டார்கள். அந்த சமயம் உலகமே இருளில் மூழ்கியது. ஏனென்றால், சிவனின் ஒரு கண் சூரியன், மற்றொரு கண் சந்திரன் அல்லவா. பூமியில் உள்ள இருளை நீக்குவதற்காக அந்த சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான அக்னி கண்ணை திறந்து, இந்த உலகத்திற்கு வெளிச்சத்தை தந்தார்.

தான் செய்த இந்த செயலை பாவமாக நினைத்த பார்வதி தேவி, பிராயச்சித்தம் தேடி இந்த உலகத்தை வந்தடைந்தாள். தென் திசையை நோக்கி நடை பயணத்தைத் தொடர்ந்தாள். அப்போது தென் திசையில் உள்ள காசி மாநகரமே மழை இல்லாமல், வறண்ட பூமியுடன், பஞ்சத்தில் வாடியது. மக்களின் கஷ்டத்தை பார்த்த பார்வதிதேவி காசி மாநகரில் அன்னபூரணியாக அவதரித்து குடியேறினாள். அதன் பிறகு காசி மாநகரம் செழிப்பானது. மக்கள் பஞ்சத்தில் இருந்து விடுபட்டனர். அன்றிலிருந்து இன்று வரை உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்துக் கொண்டு தான் இருக்கின்றாள் அன்னபூரணி.

நம்மில் சிலருக்கு அன்னபூரணியின் சிலையை வீட்டில் வைத்து வழிபடும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அன்னபூரணி சிலை இல்லாதவர்கள் வாங்கி வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது. அன்னபூரணியை வீட்டில் வழிபடும் முறை ஒரு தாம்பாளத்தில் அல்லது மரப்பலகையிலோ பச்சரிசியை வைத்து அதன்மேல் அன்னபூரணியை அமர வைக்க வேண்டும். அன்னபூரணியின் படம் உங்கள் வீட்டில் இருந்தால், சமையல் அறையில் வைத்து வழிபடுவது சிறந்தது.

அன்னபூரணியை நாம் வைத்திருக்கும் தாம்பூலத்தில் ஒரு ரூபாய் நாணயத்தையும், ஒரு மஞ்சள் கிழங்கையும் வைப்பது நல்லது. தினமும் பூ வைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நம் வீட்டில் வைத்து வழிபடும் விக்கிரகங்களுக்கு வஸ்திரம் இல்லாமல் வழிபடக் கூடாது. நம் வீட்டில் உள்ள அன்னத்தை, இல்லாதவர்களுக்கு தானமாகக் கொடுக்கும் போது தான் நம் வீட்டில் அன்னபூரணி நிரந்தரமாக தங்குவாள் என்பது நிச்சயமான உண்மை. ஒரு சிலரது வீட்டில் அன்னபூரணியை வைத்து வழிபட்டாலும் அவர்களது வீட்டில் உள்ள கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதற்கு என்ன காரணம். நாம் உணவினை சமைக்கும் போது இருக்கும் ஆர்வம், அதனை உண்பவர்களுக்கு பரிமாறும் போதும் இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு உணவினை பரிமாறும்போது மன சந்தோஷத்தோடு தான் பரிமாற வேண்டும். நம் வீட்டிலுள்ள அரிசியாக இருந்தாலும், தானியமாக இருந்தாலும் முழுமையாக தீருவதற்கு முன்பே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்று வந்து, நம்மிடம் உணவு கேட்பவர்களுக்கு மனதார உணவினை தானம் அளிக்க வேண்டும். அறை குறை மனதோடு அளிக்கப்படும் தானம் பலன் அற்றது. நம் வீட்டில் சமைக்கும் உணவினை அநாவசியமாக வீணாக்கக் கூடாது. முக்கியமாக ‘இல்லை’ என்ற வார்த்தையை நம் வீட்டில் உபயோகப்படுத்தக் கூடாது.

உங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள் அது அன்னபூரணியின் பரிபூரண ஆசியை உங்களுக்குப் பெற்றுத் தரும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »