உடலுறுப்பு தானம் செய்த முனிவர்…!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உலகத்தில் முதன்முறை உடலுறுப்பு தானம் செய்தவர் ததீசி முனிவர் ஆவார்.

ஒருவரின் உயிர் உடலை விட்டு நீங்கிவிட்டாலும், அவரின் உடலுறுப்புகள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டும் என்ற ஆழ்ந்த தத்துவத்தை ததீசி முனிவர் நமக்கு கற்றுத் தருகின்றார்.

வேதகால மகரிஷிகளுள் ஒருவர் தான் ததீசி முனிவர்.

சிவபுராணம் உட்பட மற்றசில புராணங்களில் ததீசி முனிவர் தியாகப் பேரொளியாகப் போற்றப்படுகின்றார்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (குறள் 314)

வள்ளுவரின் இந்த உயரிய சிந்தனைப்படி வாழ்ந்தவர் ததீசி.

அவர் தனக்கு கேடு நினைத்தவனின் நன்மைக்காக தன் உயிரையே ஈந்ததுதான் சிறப்புக்குரியது. அவரின் வரலாற்றைப் பார்ப்போம்.

|| வரலாறு ||

பாரத தேசத்தின் வடக்குப் பகுதியில் பெரும் செழிப்பை ஏற்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது சரஸ்வதி நதி.

இந்த நதிக்கரையின் ஓரிடத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார் ததீசி முனிவர்.

அவர் செய்த தவம் இறைவனின் அடியை பற்றும் நன்நோக்கத்திற்காகவே இருந்தது.

ஆனால் அவரது கடுமையான தவத்தைக் கண்டு இந்திரன் அஞ்சினான்.

முனிவர்களின் கடும்தவம் அவர்களுக்கு மாபெரும் சக்தியைத் தரும்.

அந்தச் சக்தியைப் பெரும்பாலும் முனிவர்கள், மனிதகுல நன்மைக்கும், தன்னுடைய ஆத்மலாபத்திற்கும் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

ஆனால், இந்திரனுக்கோ ‘எங்கே அவர்கள் அந்தச் சக்தியைக் கொண்டு, தன் இந்திரப் பதவியைப் பறித்துக் கொண்டுவிடுவார்களோ?’ என்று ஒரு பயம் எப்போதும் இருந்தது.

எனவே ததீசியின் தவத்தைக் கலைக்க இந்திரன் பல சூழ்ச்சிகள் செய்தான்.

தன்னுடைய வஞ்சக செயல்களால் முனிவருக்கு நிறைய தொந்தரவுகள் கொடுத்து வந்தான்.

இருந்தபோதிலும் அவர் அத்தனை சவால்களையும் கடந்துவந்தார்.

தன்னுடைய தவ வலிமையால் சால்புத்தன்மை பெற்று மற்ற முனிவர்களின் மத்தியில் மரியாதைக்கு உரியவரானார்.

அப்பொழுது ஒரு சமயம், விருத்திராசூரன் எனும் அசுரனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது.

அந்த யுத்தம் தொடங்கியது முதல், அசுரர்களின் கையே ஓங்கியிருந்தது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போரில் விருத்திராசூரன் வென்றான்.

தேவலோகத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்திரன், விஷ்ணுபெருமானிடம் சரண்புகுந்தான்.

விருத்திராசூரனை வெற்றிக் கொள்ள ததீசி முனிவரின் முதுகெலும்பால் ஆன ஆயுதத்தால் மட்டுமே இயலும் என விஷ்ணுபெருமான் கூறினார்.

இந்திரனும் மற்ற தேவர்களும் உடனடியாக ததீசி முனிவரின் ஆசிரமத்திற்குப் புறப்பட்டனர்.

அங்கு இந்திரன் ததீசி முனிவரிடம் எல்லாவற்றையும் எடுத்துக் கூறினான்.

விருத்திராசூரனை அழிக்க அவரின் முதுகெலும்பு தேவைபடுகின்றது என வேண்டினான்.

இந்திரன் தனக்கு செய்த தீமைகளை எல்லாம் மறந்துவிட்டு, இந்திரனின் வேண்டுகோளுக்கு ததீசி முனிவர் ஒப்புதல் தெரிவித்தார்.

ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து தன் உடலில் இருந்து உயிரை வெளியேற்றினார்.

பின்னர் ததீசி முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் உருவாக்கப்பட்டது.

இந்திரனும் விருத்திராசூரனை வென்று தேவலோகத்தை அடைந்தான்.

|| சிறப்பு ||

இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே உள்ளதென்பது சிறப்பான செய்தியாகும்.

இந்த விருது நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்களுக்கு வழங்கபடும் ஒரு விருதாகும்.

தியாகம், தானம் மற்றும் மன்னிக்கும் குணம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் ததீசி முனிவர்.

நாமும் நம்முடைய வாழ்க்கையில் இம்மூன்று குணங்களையும் வளர்த்துக் கொண்டு இறைவனின் நல்லாசியைப் பெறுவோம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72)

பொருள்:

அன்பில்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமை ஆக்கிக் கொள்வர். ஆனால் அன்புடையாரோ, தனது எலும்பையும் கூடப் பிறர்க்கு அளிப்பர்.

*ஓம் நமச்சிவாய…!*

*ஆன்மீக வாழ்க்கைக்கு நம் புராணங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்…!*

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »