நரசிம்மர் ஒரு வேடனிடம கட்டுண்ட கதை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அண்டசராசரங்களையும் கிடுகிடுக்க வைத்த நரசிம்ம மூர்த்தி, இதோ ஒரு வேடனுக்கு கட்டுண்ட கதையை படியுங்கள். உங்களுக்கே புரியும்.

ஆதிசங்கரரின் சீடர்களுள் முக்கியமானவர் பத்மபாதர். கங்கை ஆற்றின் ஓரம் ஒரு முறை ஆதிசங்கரர் நின்று கொண்டிருக்கையில் கரையின் அந்தப் பக்கம் பத்மபாதர் நிற்பதை காண்கிறார். தனது சீடனை “உடனே வா” என்று அழைக்கிறார்.

குருநாதர் அழைக்கிறாரே என்று எதை பற்றியும் கவலைப்படாது அப்படியே ஆற்றின் மீது கால் வைத்து நீர் மேல் நடக்க ஆரம்பித்துவிட்டார் பத்மபாதர்.

என்ன ஆச்சரியம் அவரது குருபக்திக்கு கட்டுப்பட்டு, கங்காதேவி அவர் ஒவ்வொரு முறை பாதத்தை எடுத்துவைக்கும்போதும் ஒரு தாமரை மலரை தோன்றச் செய்தாள்.

அதன் மீது நடந்து வந்துவிட்டார் பத்மபாதர்.

பிறகு தான் தெரிந்தது தான் தாமரை பூக்கள் மீது நடந்து வந்தது. “எல்லாம்…. குருநாதரின் மகிமை” என்று மெய்சிலிர்த்து ஆதி சங்கரரின் கால்களில் வீழ்ந்தார்.

அது முதல் தான் அவருக்கு ‘பத்மபாதர்’ என்று பெயர் ஏற்பட்டது.

மிக தீவிர நரசிம்ம பக்தரான இவருக்கு எப்படியாவது நரசிம்மரை நேரில் காணவேண்டும் என்று ஆவல் மேலிட்டது.

ஆவல் கடைசியில் வைராக்கியமானது. எப்படியாவது நரசிம்மரை நேரில் கண்டு விட வேண்டும் என முடிவு எய்து காட்டில் கடும் தவமிருந்தார்.

ஒருநாள் அவ்வழியே ஒரு வேடன் வந்தான். தண்ணீரோ உணவோ இன்றி பத்மபாதர் பல நாட்களாக அங்கு அமர்ந்திருப்பதை (தியானம் என்றால் என்ன என்று அவனுக்கு தெரியாது) அறிந்து கொள்கிறான்.

“சாமி! எதுக்கு இங்கே வந்து கண்ணை பொத்திகிட்டு உட்கார்ந்திருக்கே? உனக்கு வீடு வாசல் இல்லையா? உன்னை பார்த்தா பாவமா இருக்கே…” என்றான்.

“என்னை தொந்தரவு செய்யாதே….நான் தியானத்தில் இருக்கிறேன்”.

“அதெல்லாம் எனக்கு தெரியாது சாமி! எதுக்காக சாப்பாடு தண்ணி இல்லாம கண்ணை மூடி இருந்தே அதை சொல்லு!” என்றான்.

“நான் நரசிம்ம பிரபுவை எண்ணி தவமிருக்கிறேன்”.

“நரசிம்மமா? அப்படின்னா என்ன?”

வேடன் புரியாது கேட்கிறான்.

“சிங்க முகம், மனித உடல் கொண்டது அது. உன்னைப் போன்றவர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை…”

“நீங்க சொல்ற மாதிரி அப்படி ஒரு மிருகத்தை காட்டில் நான் பார்த்ததே கிடையாதே! சரி… நீ எங்கிட்ட சொல்லிட்டே இல்லே! அது என் கண்ணில் படாமலா போயிடும்!

இன்று சாயங்காலத்துக்குள் அதை புடிச்சுட்டு வந்துடுறேன்…” என்றவனை பரிதாபமாக பார்த்தார் பத்மபாதர். “இவனுக்கு எப்படி விளங்க வைப்பது….?’ என்று எண்ணிக்கொண்டார்.

வேடனின் எண்ணமெல்லாம் நரசிம்மத்தின் மேல் இருந்தது. அவன் காட்டில் கடுமையாக தேடி அலைந்தான். இதுவரை அவன் நுழையாத அடர்ந்த பகுதிகளில் எல்லாம் புகுந்தான்.

மான், முயல் என்று எத்தனையோ ஓடின. உணவைப்பற்றி அவன் கவலைப்படவே இல்லை.

தாகத்தையும் பொருட்படுத்தவில்லை. பல மணிநேரங்கள் கடந்து மாலையாகி விட்டது.

“ஐயோ! அந்த சாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போயிற்றே! வாக்கை காப்பாற்றாதவன் பூமியில் வாழ தகுதியில்லாதவன்.

என் குலதெய்வமே! கந்தா… அந்த மிருகத்தை என் கண் முன்னால் காட்டப்பா!” என்று உளமுருக வணங்கினான். பயனில்லை. நரசிம்மம் கண்ணில் படவில்லை.

இனியும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று உயரமான பாறை ஒன்றில் ஏறி, குதித்து உயிர்விட தயாரானான். அவனது கடமை உணர்வு அர்பணிப்பு கண்டு அந்த ஸ்ரீ மன் நாராயணனே கலங்கி விட்டார்.

நரசிம்ம வடிவில் அவன் முன்னால் பிரத்யக்ஷமானார்.

“ஆகா! மாட்டிகிட்டியா!” என்று குதூகலமடைந்த வேடன், அவரை காட்டு கொடிகளைக் கொண்டு கட்டினான்.

வேதாந்திகளுக்கும், தபஸ்விகளுக்கும் கட்டுப்படாத அந்த பரம்பொருள் அந்த வேடனின் கட்டுக்கு பணிந்து நின்றது.

நரசிம்மத்தை இழுத்துக்கொண்டு பத்மபாதர் முன்னால் வந்தான்.

“சாமி இதோ பாருங்க… இதுதானே நீர் கேட்ட நரசிம்மம்”.

பத்மபாதரின் கண்ணுக்கு நரசிம்மர் தெரியவில்லை. வேடனின் கையிலிருந்த காட்டுக்கொடிகள் மட்டும் அந்தரத்தில் சுற்றிக்கொண்டு நிற்பது தான் தெரிந்தது.

“அடேய்! பைத்தியமே… அவன் என் அரிய தவத்திற்கே வர மறுக்கிறான். உன்னிடமா சிக்குவான்? வெறும் கொடிகளை காட்டி நரசிம்மம் என்கிறாய்?” என்றபடி ஏளனமாய் சிரித்தார்.

“இல்லே. சாமி… இதோ இந்த கட்டுல இருக்குது அது…. நல்லா பாருங்க…” வேடன் கூறுகிறான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“பத்மபாதா! வேடன் என்னை அடைந்தே தீர வேண்டுமென ஒரே குறியுடன் அலைந்தான்.

என்னைக் காணாமல் உயிரையும் விட துணிந்தான். நீயோ, அலைபாயும் மனதுடன் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகத்துடன் தவமிருந்தாய்.

தவிர ஆணவமும் கொண்டாய்….உன் கண்ணுக்கு எப்படி தெரிவேன்?” என்ற கூறியபடி மறைந்து விட்டார்.

ஒரு வேடனின் பக்திக்கு கட்டுப்பட்ட நரசிம்மன், தனக்கு காட்சியளிக்காமல் போனது பற்றி பத்மபாதர் வெட்கி தலைகுனிந்தார். அந்த வேடனின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார்.

ஆதிசங்கரரின் வராலற்றில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது.

*!! நமஸ்தே நரசிம்மாயா !!*

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »