மனத்தை கட்டுப்படுத்துவது எப்படி?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

🌿 குரங்குகள் இயற்கையாகவே சஞ்சல மனம் படைத்தவை. அத்தகைய குரங்கு ஒன்று இருந்தது. அதற்கு நிறைய கள்ளைக் குடிக்கக் கொடுத்தான் ஒருவன். அதனால் அதன் பரபரப்பு அதிகமாகியது. அது போதாதென்று தேள் ஒன்று அதனைக் கொட்டியது. தேள் கொட்டினால் மனிதனே நாள் முழுதும் குதிப்பான். குரங்கின் நிலையைச் சொல்லவா வேண்டும்? அதன் போதாத காலத்தைப் பூரணமாக்க ஒரு பேயும் அதனைப் பிடித்துக் கொண்டது. இப்போது அந்தக் குரங்கின் அடக்க முடியாத சஞ்சலத்தையும், படபடப்பையும் விளக்க வார்த்தைகள் எங்கே உள்ளன?

🌿 மனித மனம் அந்தக் குரங்கின் நிலைக்கு நிகரானது. இயற்கையாகவே அது சஞ்சல இயல்பு படைத்தது. ஆசை என்னும் கள் குடித்ததனால் அதன் சஞ்சலமும் வெறியும் அதிகரிக்கின்றன. ஆசை குடிகொண்ட பிறகோ பிறர் வெற்றியைக் கொண்டு பொறாமை கொள்கிற குணமாகிய தேள் கொட்டியது. முடிவாக கர்வம் என்ற பேயும் மனத்தினுள் புகுந்து எல்லா பெருமையும் தனக்கே என்று நினைக்கச் செய்கிறது. இத்தகைய மனத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்!…ஆனால் இது முடியக்கூடியதா? ஆம், கண்டிப்பாக முடியும்.

🌿 எனவே முதல் பாடமாக வருவது இது: சிறிது நேரம் அமர்ந்து மனத்தை அதன் போக்கிலேயே அலையவிடுங்கள். அது எப்போதும் குமுறிக் கிளம்பியவண்ணமே உள்ளது. குரங்கு குதித்துத் தாவுவதைப் போன்றது அது. எவ்வளவு வேண்டுமானாலும் அது குதிக்கட்டும். நீங்கள் பொறுமையாக அதைக் கவனிக்க மட்டும் செய்யுங்கள். அறிவே வலிமை.. மனம் என்ன செய்கிறது என்பதை அறியாமல் அதைக் கட்டுப்படுத்த முடியாது. கடிவாளத்தை விட்டுப்பிடியுங்கள். தீய எண்ணங்கள் பல அதில் எழலாம். அத்தகைய எண்ணங்கள் உங்கள் மனத்தில் இருந்ததைப் பற்றி நீங்களே திகைப்படைவீர்கள். நாள் செல்லச் செல்ல மனத்தின் வெறித்தனமான போக்கு குறைவதையும், அது மெள்ள மெள்ள அமைதி பெறுவதையும் காண்பீர்கள். ஆரம்பத்தில் சில மாதங்கள் மனத்தில் பல எண்ணங்கள் எழுவதைக் காண்பீர்கள். பிறகு அவை குறையத் தொடங்கும். சில மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து குறைந்து கொண்டே போகும். கடைசியாக மனது பூரணக் கட்டுப்பாட்டில் வந்துவிடும். ஆனால் தினமும் பொறுமையுடன் பயிற்சி செய்யவேண்டும்…இது ஒரு பெரிய வேலைதான், ஒருநாளில் செய்துமுடிக்கின்ற வேலையல்ல. பொறுமையாகத் தொடர்ந்து வருடக்கணக்காகப் பயிற்சி செய்தால் நாம் வெற்றி பெறுவோம்.

🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

கடவுளை மனத்தால் அறிய முடியுமா?
—–
🌿 நாம் சாதாரணமாக அறிவு என்று சொல்வதற்கு என்ன பொருள்?

🌿 அறிவு என்பது, நம் மனத்தின் எல்லைக்கு உட்பட்டது, நாம் அறிவது.

🌿 அறிவு மனத்தைக் கடந்ததாக இருக்கும்போது அதை அறிவு என்று சொல்ல முடியாது. மனத்தின் எல்லையை கடந்து இருப்பதை மனத்தால் அறிய முடியாது

🌿 பரம்பொருள், மனத்தின் எல்லைக்குள் வந்து விட்டால் அது பரம்பொருளாக இருக்க முடியாது, எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடும்.

🌿 மனத்தால் அறியக்கூடியது,மனத்தினால் கட்டுப்பட்டது எதுவுமே எல்லைக்கு உட்பட்டதாக ஆகிவிடுகிறது.

🌿 மனத்தின் எல்லையை கடந்து இருக்கும் பரம்பொருளை மனத்தால் எப்படி அறிய முடியும்?

🌿 ஆகவே பரம்பொருளை அறிவது என்று சொல்வதே முரணானது. அதனால்தான் இந்தக் கேள்விக்கு ஒரு போதும் பதிலே கிடைக்கவில்லை.

🌿 கடவுளை அறிய முடியுமானால் அவர் கடவுள் அல்ல; அவரும் நம்மைப்போல் எல்லைக்கு உட்பட்டவராக ஆகிவிடுகிறார். அவரை அறிந்து கொள்ள முடியாது. அவர் அறிந்து கொள்ள முடியாதவராகவே என்றும் இருக்கிறார்.

🌿 மனத்தால் அறிந்துகொள்ள முடியாத கடவுளை அறியவே முடியாதா?

🌿 அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் நாம் இந்த நாற்காலியையே அறிய முடிகிறது இந்த உலகை பார்க்க முடிகிறது. அவர் சாட்சிப் பொருள், எல்லா அறிவுக்கும் நிரந்தர சாட்சியாக அவர் இருக்கிறார். நாம் அறிவதையெல்லாம் அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் அறிய முடியும்.

🌿 நமது சொந்த ஆன்மாவின் சாரமாக இருப்பவர் அவர். நான் உணர்வின் சாரமாக இருப்பவரும் அவரே. இந்த நான்- உணர்வின் உள்ளேயும் மூலமாகவும் அல்லாமல் நாம் எதையும் அறிய முடியாது.

🌿 அவர் அறியக் கூடியவரும் அல்ல; அறியப்பட முடியாதவரும் அல்ல. இந்த இரண்டு நிலைகளையும்விட எல்லையற்ற மடங்கு உயர்ந்த நிலையில் அவர் இருக்கிறார்.

🌿 அவரே நமது ஆன்மா. அந்தப் பரம்பொருள் நிறைந்திருக்காவிட்டால், இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு கணம்கூடயாரால் வாழ முடியும்? யாரால் மூச்சுவிட முடியும்?

🌿 ஏனென்றால் அவருள்ளும் அவர் மூலமாகவும் தான் நாம் மூச்சுவிடுகிறோம். அவருள்ளும் அவர் மூலமாகவும்தான் வாழ்கிறோம்.

🌿 அவர் எங்கேயோ நின்றுகொண்டு என் உடலில் ரத்தத்தை ஓடச் செய்கிறார் என்பது பொருளல்ல. எல்லாவற்றின் சாரமாகவும் ஆன்மாவின் ஆன்மாவாகவும் அவர் இருக்கிறார் என்பதே பொருள்.

🌿 எந்தக் காரணத்தைக் கொண்டும் கடவுளை அறிவதாக நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது அவரைத் தாழ்த்திப் பேசுவதே ஆகும்.

🌿 நாம் நம்மை விட்டு வெளியே குதிக்க முடியாது. அதுபோல் நாம் கடவுளை அறியவும் முடியாது.

🌿 அறிவு என்றால், ஒன்றை நம்மிலிருந்து வேறுபடுத்தி அறிவது உதாரணமாக, நாம் ஒன்றை நினைக்க வேண்டுமானால் அதை மனத்திற்கு வெளியே கொண்டுவந்து, அதாவது அதை மனத்திலிருந்து வேறுபடுத்திதான் பார்க்க முடியும்.
கடவுள் விஷயத்தில் இம்மாதிரி செய்ய முடியாது. ஏனெனில் அவர் நம் ஆன்மாவின் சாரமாக இருப்பவர். அவரை நமக்கு வெளியே கொண்டு நிறுத்த முடியாது.

🌿 வேதாந்தத்திலுள்ள மிக உன்னதமான கருத்துக்களில் ஒன்று இதோ இருக்கிறது. உன்னுடைய ஆன்மாவின் சாரமாக இருப்பவரே மெய்ப்பொருள். அவரே பரமாத்மா. நீயே அது. நீயே கடவுள் என்பதன் பொருள் இதுவே.அஹம் பிரம்மாஸ்மி. நான் கடவுளாக இருக்கிறேன்

🌿 நம் ஆன்மாவின் சாரமாகவும் மெய்ப்பொருளாகவும் இருப்பவரை, நம்மிலிருந்து நாம் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?

🌿 கடவுள் நம்மோடு இரண்டறக் கலந்தவர். நம்மோடு இரண்டறக் கலந்து நாமாகவே இருப்பவர் . நம்மை நாமே புறத்தில் கொண்டுவந்து பார்க்க முடியாது. நம்மை வெளியே கொண்டு வந்து அறிய முடியாது. ஏனெனில் நாமே அதுவாக இருக்கிறோம். அதிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.

🌿 நாம் நம்மைவிட நன்றாக வேறு எந்தப் பொருளையும் அறிந்திருக்க முடியாது, நமது அறிவின் மையமே நாம்தானே.-
—-
🌿 சுவாமி விவேகானந்தர் 🌿

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »