ராசியை கண்டு ஏமாறாதீர்! அம்சத்தை கண்டு அழகாக பலன் சொல்வீர்!


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ராசியை கண்டு ஏமாறாதீர்! அம்சத்தை கண்டு அழகாக பலன் சொல்வீர்!

வராஹமிகிரரின் லகு ஜாதகம் கூறும் அரிஷ்ட பங்கங்கள்.

உலகில் பிறந்த ஒவ்வொருவருடைய ஜாதகமும் நல்ல யோகங்களையும் தீய தோஷ அரிஷ்டங்களையும் கொண்டதாகவே உள்ளது. ஒவ்வொரு ஜோதிடரின் கண்ணோட்டத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக விவரிக்கப்படுகிறது.

ஜாதகத்தில் கோள்களின் அமைப்பு நிலைகளை கொண்டு அரிஷ்ட தோஷயோகங்களை ஒருவர் சொன்னாலும் அவை மற்ற கோள்நிலைகளின் காரணமாக பங்கமாகி அந்த தோஷங்கள் நீங்கிவிடும் என்பதும் உண்மையே.

சுலோகம் 1, குரு பலம்.

ஜாதகத்தில் குருவானவர் மற்ற எல்லாக் கோள்களைவிட பலம் பெற்று லக்னத்தில் நின்றிருக்க ஜாதகத்தில் உள்ள சகல தோஷங்களையும் தன்னை வணங்கியவனின் பாபங்களை சிவபெருமான் நீக்குவதுபோல் குருபகவான் சகல தோஷங்களையும் நீக்கி விடுவார்

இங்கு மற்ற கோள்கள் குருபகவானைவிட குறைவான பலம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

ஒரு ஜாதகத்தில் குரு ஒருவீட்டில் நின்றால் அவர் 5 மற்றும் 9ஐ பார்ப்பதன் மூலம் ஒரு தத்துவத்தை அதாவது நெருப்பு நிலம் நீர் காற்று என்பதில் ஒரு தத்துவத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார் அத்துடன் 7ம் வீட்டை பார்ப்பதன் மூலம் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தத்துவத்துக்கு எதிர் த்துவத்தையும் கண்காணிக்கிறார்.
இது குருவைத் தவிர வேறு எந்த கோளுக்கும் இல்லாத சிற்ப்பாகும்.

சுலோகம் 2, லக்னாதிபதி பலம்,

லக்னாதிபதி பலம் பெற்று இருக்க பாபக்கோள்களின் பார்வை இல்லாமலிருக்க கேந்திரங்களில் நின்ற சுபக்கோள்களின் பார்வையை பெற்றிருக்க இவருடன் சந்திரனும் கூடியிருந்தால் நீண்ட ஆயுளையும் பலவிதமான நல்ல குணங்களையும் லட்சுமி கடாட்சத்தையும் தருவார்.

லக்னாதிபதி பலம் பெற்று சந்திரனுடன் கூட ஆயுள் சம்பந்தப்பட்ட அரிஷ்டங்கள் நீங்கும்
கேந்திரங்களில் நின்ற சுபர்கள் பார்ப்பதால் செல்வ வளம் மிகும்.ஆக செல்வம் சம்பந்தப்பட் தோஷங்கள் இருந்தாலும்கூட லக்னாதிபதி கேந்திர சுபர் சம்பந்தம் அவற்றை நீக்கும் என்பது உறுதியாகிறது
லக்னாதிபதி மற்றும் சந்திரன்(மனம் மற்றும் உடல் காரகன்) சம்பந்தம் ஆயுள் மற்றும் குணங்களை தந்து தோஷங்களை நீக்குகிறது.

சுலோகம் 3 குரு சந்திர யோகமும் திரேக்காண பலமும்

பிறப்பு லக்னத்திற்கு எட்டாம் வீட்டில் சந்திரனும் குருவும் கூடி நிற்க அவர்கள் நின்ற திரேக்காணம் புதன் அல்லதுசுக்கிரனுடையதாக இருக்க ஜாதகத்தில் உள்ள அரிஷ்ட தோஷங்களிலிருந்து சந்திரன் காப்பாற்றுவார்

இங்கு சந்திரனால் வரும் தோஷத்தை சந்திரனே நீக்கும் விஷயம் சொல்லப்படுகிறது.அதாவது சந்திரன் நின்ற ராசியின் கடைசி நவாம்சத்தில் ஏதேனும் ஒரு பாபக்கோள் நின்று மாலை சந்தி நேரத்தில் சந்திர ஓரையில் பிறப்பவனுக்கு ஆயுள் தோஷம் ஏற்படும்.
இந்த தோஷத்தை சந்திரனுடன் குரு ச்ர்ந்து புதன் அல்லது சுக்கிர நவாம்சம் பெறுவதால் நீக்கப்படுகிறது.

சுலோகம் 4. பூரண பலம் பெற்ற சந்திரன் பலம்

சுபர்களின் ராசிகளில் பூரணபலம் பெற்ற சந்திரன் இருந்தாலும் அல்லது சுபக்கோள்களின் மத்தியில் சந்திரன் இருந்தாலும் அரிஷ்ட தோஷங்கள் பங்கமடைந்து நீங்கும். சந்திரனுக்கு சுக்கிரன் பார்வை கிட்ட தோஷம் போய் விடும்

இங்கு சந்திரனுக்கு நான்கு கேந்திரங்களில் பாபக்கோள்கள் நிற்க ஆயுள் அரிஷ்டம் உண்டாகும் என்ற நிலை சந்திரன் பூரணபலம் பெறுவதால் மாறுதல் அடைகிறது.

சுலோகம் 5 சந்திரன் ஒரு பாபக்கோளுடன் கூடியிருக்க. அதற்கு கேந்திர வீடுகளில் குரு சுக்கிரன் புதன் இவர்களில் ஒருவர் பலம் பெற்று நின்றால் அரிஷ்ட தோஷம் பங்கமாகி நீங்கிவிடும்.

அதாவது ஜென்ம லக்னம் 7 8 12ம் வீடுகளில் சந்திரன் பாபர்களுடன் கூடி சுபர் பார்வையில்லாமல் இருக்கும் நிலையால் உண்டாகும் ஆயுள் அரிஷ்ட தோஷம் மேற்கூறியவாறு கேந்திரத்தில் ஒரு சுபக் கோள் பலம் பெற நீங்குகிறது.

சுலோகம் 6 ஆறாம் வீட்டு சந்திரனின் ஆயுள் பலம்.

ஜென்மலக்கினத்துக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் நின்று குரு புதன் சுக்கிரன் இவர்களில் ஒருவரது திரேக்காணத்தை அடைய அரிஷ்ட தோஷம் சந்தேகமில்லாமல் நீங்கிவிடும்.

பொதுவாக ஆறாம் வீட்டில் நின்ற சந்திரன் ஆயுளைக் குறைப்பார் என்பது விதியாகும் அவரே குரு சுக்கிரன் புதன் இவர்களில் ஒருவரது திரேக்காணத்தில் இருக்க ஆயுள் பலத்தை தருவர் என்கிறது இந்த சுலோகம்.

சுலோகம் 7 சந்திர சுப கர்த்தாரி யோகம்.

பூரணகலைகளுடன் கூடி பலம்பெற்ற சந்திரன் இரண்டு சுபக்கோள்களுக்கு மத்தியில் இருக்க எல்லா அரிஷ்ட தோஷங்களும் நீக்கும்.

இங்கு ஜென்ம லக்கினத்துக்கு 4. 8 7ல் இருந்து சந்திரனுக்கு இருபுறம்(2. 12ல்) பாபக்கோள்கள் இருக்க உண்டாகும் அரிஷ்ட தோஷம் சந்திரனுக்கு முன்னும் பின்னும் அதே ராசியில் உள்ள சுபக்கோள்களால் நீங்கும் என்கிறது.மேலும் சந்திரனுக்கு 2 12ல் சுபக்கோள்கள் இருந்தாலும் அரிஷ்டம் பங்கமாகி சுப கர்த்தாரி யோகமாகிவிடும்.

சுலோகம் 8 நிசி சந்திர பலம்

ஜென்ம லக்னத்துக்கு 6 அல்லது 8ம் வீட்டில் சந்திரன் வளர்பிறையாய் பூரணகலைகளுடன் நிற்க ஜாதகர் இரவு நேரத்தில் பிறந்தால் சந்திரனால் அரிஷ்ட தோஷமே உண்டாகாது.

இரவு நேரத்தில் பலம் பெற்ற வளர்பிறைச் சந்திரன் ஆயுள் அரிஷ்ட தோஷத்தை தராது என சுலோகம் கூறுகிறது.

சுலோகம் 10. குரு பலம்

லக்கனம் முதலான கேந்திர வீடுகளில் குரு பலம் பெற்று அம்ச சக்கரங்களில் தனது வீடுகளில் பூரண பலம் பெற்றிருக்க அரிஷ்ட தோஷம் நீக்கும்.

இங்கு குருவின் பலமே மற்றைய கோளகளின் பலத்தைவிட மிக முக்கியமானது என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.

சுலோகம் 11. சுபக்கோள்களின் பலம்

சுபக்கோள்களான சந்திரன் சுக்கிரன் புதன் ஆகியோர் சுப ராசிகளில் சுப நவாம்சங்களில் சுப திரேக்காணங்களில் இருக்க எல்லா அரிஷ்ட தோஷங்களும் நீங்கும்

இங்கு குருவுக்கு அடுத்து ஒரு ஜாதகத்தில் சுபக்கோள்களின் பலத்தின் அவசியம் பற்றி கூறப்படுகிறது.

சுலோகம் 11 ராசி நாதன் பலம்

சந்திரன் நின்ற ராசிநாதன் சுபராகவோ கேந்திராதிபதியாகவோ இருக்க அரிஷ்ட தோஷம் நீங்குகிறது.

இங்கு சந்திரன் நின்ற ஜென்ம ராசி நாதனின் பலம் வலியுறுத்தப் படுகிறது.

சுலோகம்.12. பாபக் கோள்கள் சுப வர்க்கம் அடையும் பலம்

பாபக் கோள்கள் சுப வர்க்கங்களில் இருந்தாலும் சுபக்கோள்களால் பார்க்கப்பட்டாலும் அவற்றால் ஏற்படும் அரிஷ்டங்கள் நீங்கும்.

இங்கு பாபக்கோள்கள் தாங்கள் நின்ற சுபக்கோள்களின் வர்க்கத்தின் தன்மையில் தங்களது தீய சுபாவ பலனை மாற்றி பலன்களை தரும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

சுலோகம் 13. இராகு தரும் பலம்

லக்கினத்திலிருந்து 3 6 11 ல் இராகு நின்று சுபக் கோள்களால் பார்க்கப்பட. அரிஷ்ட தோஷங்கள் நாசமடையும்.

இங்கு சுபாவ தீய கோளான ராகுவும் கூட அரிஷ்டம் தராது என்ற கருத்து சொல்லப்படுகிறது.நடைமுறையில் ராகுதிசை நல்ல பலனை இந்த அமைப்பின் மூலமே தரக்கூடும்.

சுலோகம் 14. சிரோதய ராசிகளின் பலம்.

சிரோதய /தலை உதய ராசிகளான சிம்மம் கன்னி துலாம் கும்பம் இவற்றில் எல்லா கோள்களும் நிற்க எல்லா வித அரிஷ்ட தோஷங்களும் நீங்கி விடும்.

சிரோதய ராசிகள் உடனடி பலன்களை/முற்பலன் தரும் ராசிகள் என்பதால் வலிமை பெற்று தோஷங்களை நீக்குகின்றன என்பது சொல்லப் படுகிறது.

சுலோகம் 15 பட்ச சந்திரன் பலம்

ஒரு ஜாதகர் சுக்ல பட்ச/வளர் பிறை இரவிலோ அல்லது கிருஷ்ண பட்ச/தேய்பிறை பகலிலோ பிறந்து முறையே பாவர் சுபர்களால் பார்க்கப்பட்டு 6 8 ம் வீடுகளில் நின்ற சந்திரன்கூட தோஷம் செய்வதில்லை. தகப்பன் மகனைக் காப்பாற்றி பாதுகாப்பதுபோல எல்லாவித அரிஷ்டங்களையும் நீக்குகிறது

இங்கு வளர்பிறை இரவில் பிறந்தவருக்கும் தேய்பிறை பகலில் பிறந்தவருக்கும் 6 8 ல் நின்றாலும் கூட சந்திரன் தந்தை/உயிர் காரகன் போல் செயல் படுகிறான் என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.

சுலோகம் 16. சுபக் கோள்களின் சம்பந்த பலம்.

பிறப்பு ஜாதகத்தில் பலம் பெற்ற ஒரு சுபக்கோளை வேறொரு சுபக்கோள் பார்வை செய்திட எல்லாவித அரிஷ்ட தோஷங்களும் பெருங்காற்றில் மரங்கள் வீழ்வதுபோல் அழிந்துவிடும் என்பது முன்னோர் சொன்னதாகும்.

இங்கு இரண்டு சுபக்கோள்களின் பலம்கூட ஒரு ஜாதகத்தை நிலைநிறுத்திவிடும் என்ற உண்மை வலியுறுத்தப்படுகிறது.

ஆக ஒரு ஜாதகத்தில் ராசி மண்டலத்தில் கோள்களின் நிலையால் பலவிதமான அரிஷ்ட தோஷங்கள் காணப்பட்டாலும் கூட அவை பெற்ற சுப வர்க்கங்களின் காரணமாக அந்த அரிஷ்ட தோஷங்கள் நீங்கி விடுகின்றன என்பதை லகுஜாதகத்தில் ஜோதிட ஆசான் வராஹமிஹிரர் அழகுபட சொல்லியுள்ளார

ராசியை கண்டு ஏமாறாதீர். அம்சத்தை கண்டு அழகாக பலன் சொல்வீர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »