தேவர்களின் ஆணவத்தை அடக்கிய வேலன்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மேருமலையையே கிள்ளி எறியும் பாலமுருகனின் செயல்கண்டு இந்திராதி தேவர்கள் ஆச்சரியமும் ஆத்திரமும் கொண்டனர். உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என்ற மாயை கண்களை மறைத்தது. எனவே, சிறுவன் என்றும் பாராமல், முருகனைத் தட்டிக் கேட்டனர்.ஏ சிறுவனே ! உன் விளையாட்டை நிறுத்தப் போகிறாயா, இல்லையா ? என இந்திரன் ஆவேசமாகக் கேட்டான்.

தேவர் தலைவனே! நானோ சிறுவன். நீயோ பெரும்படையுடன் வந்துள்ளாய். சிறுவர்கள் விளையாடுவது என்பது இயற்கை தானே ! என் விளையாட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே, என்றான். வருணன் இந்த பேச்சின் குறுக்கே புகுந்தான். கடலுக்குள் புகுந்து ஆமைகளையும், திமிங்கலங்களையும் கசக்கி பிழிந்து விளையாடுகிறாய். இது தவறில்லையோ ? என்றான். வருணனே ! பிதற்றாதே. பூலோகத்தில் குழந்தைகள் ஏரிகளில் இறங்கி மீன்பிடித்து விளையாடுகிறார்கள். நானும் ஒரு சிறுவன் தான். என் வீரத்தை சுயசோதனை செய்து கொள்ளும் பொருட்டு அவற்றை பிடித்து விளையாடுகிறேன். ஒரு வேளை என் கையால் அவை உயிர்விட்டால் கூட, அவற்றுக்கு முக்தியே கிடைக்கிறது. பிறப்பற்ற நிலையால் ஆனந்தம் கொண்டு, அவை சிவலோகப் பதவியை அடைந்துள்ளன. கணங்களாகவும், என் தாயின் கண்களுக்கு அழகு சேர்ப்பனவாகவும் அவை உருவெடுத்துள்ளன. அதனால் என் அன்னை மீனாட்சி என்ற திருநாமம் பெற்றிருக்கிறாள். தேவர்களே! என் பிறப்பின் ரகசியம் உங்களுக்கு மறந்து விட்டதோ? நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்றார்.

தேவர்களும் முருகனை எதிர்த்துப் பேசினர். குழந்தாய் ! அந்த சிவனும், பார்வதியுமே ஜீவன்களுக்கு முக்தி கொடுக்கும் தன்மை படைத்தவர்கள். உனக்கு ஏது அந்த சக்தி ? இதோடு நிறுத்திக் கொண்டால் பிழைப்பாய் இல்லாவிட்டால், உன்னைக் கொன்றுவிடுவோம், என்று மிரட்டினர்.வேலன் அந்த வாய்ச்சொல் வீரர்களின் மீது சிகரத்தின் ஒரு பகுதியைப் பிடுங்கி வீசி எறிந்தான். தேவர்கள் சிதறியடித்து ஓடினர். தேவேந்திரன் அம்புமாரி பொழிந்தான். அவையெல்லாம் மலர்மாலைகளாகி கந்தனின் கழுத்தில் விழுந்தன. முருகன் தன் கையிலிருந்த சின்னஞ்சிறு அம்புகளை தேவர்கள் மீது அடித்தான். ஒரு அம்பு தேவவேந்திரன் வீற்றிருந்த ஐராவதம் யானையின் மத்தகத்தை குத்திக் கிழித்தது. அது அலறியபடியே விழுந்து இறந்தது. யானை மீதிருந்த இந்திரன் தரையில் உருண்டான். இதைப் பார்த்து கந்தன் கைகொட்டி சிரித்தான். இந்திரனுக்கு ஆத்திரம் அதிமாகி தன் வஜ்ராயுதத்தை வடிவேலன் மீது எறிந்தான். அதை அவன் சுக்கு நூறாக்கினான். அனைத்து ஆயுதங்களும் தீர்ந்து போகவே நிர்க்கதியான தேவர்கள் உயிர்பிழைக்க ஓடினர். அவர்களின் பலரைக் கொன்றான் வடிவேலன்.

தொடரும்…

ஓம் சரவண பவாய நமஹ!

திருப்புகழ்
〰️〰️〰️〰️〰️〰️〰️
அடியார்மனஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
அபராதம் வந்து கெட்ட …… பிணிமூடி

அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
அனலோட ழன்று செத்து …… விடுமாபோற்

கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
கலியோடி றந்து சுத்த …… வெளியாகிக்

களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
கதியேற அன்பு வைத்து …… னருள்தாராய்

சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
தழல்மேனி யன்சி ரித்தொர் …… புரமூணும்

தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
தழல்பார்வை யன்ற ளித்த …… குருநாதா

மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
வெளியாக வந்து நிர்த்த …… மருள்வோனே

மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
மிகுமாலொ டன்பு வைத்த …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

அடியார்மனஞ்சலிக்க எவராகிலும் பழிக்க … உன் அடியார்கள்
மனம் துன்பப்படும்படி அவர்களை யாராலும் பழித்தால்,

அபராதம் வந்து கெட்ட பிணிமூடி … அதனால் பிழை ஏற்பட்டு,
கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்து,

அனைவோரும் வந்து சிச்சி யென … எல்லோரும் வந்து சீ சீ என்று
அருவருப்புடன் இகழ,

நால்வருஞ்சிரிக்க … நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க,

அனலோடு அழன்று செத்து விடுமாபோல் … கடைசியில் இறந்து
நெருப்பிடை வீழ்ந்து வெந்துவிடுவது போல,

கடையேன்மலங்கள் முற்றும் இருநோயுடன் … இழிந்தவனாகிய
என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும்,
நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும்,

பிடித்தகலியோடு இறந்து … என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும்
யாவுமாக அழிபட்டு,

சுத்த வெளியாகி … ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி,

களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து … மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட,
நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து,

முத்தி கதியேற அன்பு வைத்து உன் அருள்தாராய் … முக்தி
வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது
திருவருளைத் தந்தருள்க.

சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை … சடையின் மீது
கங்கை நதியைச் சூடி, நந்தி வாகனத்தின் மீதேறும் எங்கள் தந்தை,

சுத்த தழல்மேனியன்சிரித்து ஒர் புரமூணும் தவிடாக …
பரிசுத்தமான நெருப்பு மேனியன் ஆகிய சிவபிரான் சிரித்தே ஒப்பற்ற
திரிபுரம் மூன்றையும் எரித்துத் தவிடு பொடியாகும்படியும்,

வந்தெதிர்த்த மதன் ஆகமுஞ் சிதைத்த … வந்து தன்னை எதிர்த்த
மன்மதனின் உடலைச் சிதைத்து அழியுமாறு செய்த

தழல்பார்வை அன்றளித்த குருநாதா … (நெற்றியிலுள்ள)
நெருப்புக்கண்ணின் சுடரில் ஒருநாள் வெளிப்பட்ட குருநாதனே,

மிடிதீர அண்டருக்கு மயிலேறி … தேவர்களுக்கு எற்பட்ட துன்பம்
தீர, மயில் மீதேறி,

வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே …
வஞ்சக அரக்கர்களின் இறுமாப்பும், செயல்களும் ஒடுங்கும்படிச் செய்து
வெளிவந்து வெற்றி நடனம் புரிந்தவனே,

மினநூல் மருங்குல் பொற்பு முலைமாது இளங்குறத்தி …
மின்னல் போன்றும், நூல் போன்றும் நுண்ணிய இடையையும், அழகிய
மார்பையும் உடைய பெண்ணாம் இளங் குறத்தி வள்ளியின் மீது

மிகுமாலொடு அன்பு வைத்த பெருமாளே. … மிக்க ஆசையுடன்
அன்பு வைத்த பெருமாளே.

திருமுருகன்
ஸ்ரீமத் அருணகிரிநாதர் திருவடி போற்றி !

தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாக நிற்க வல்ல பெருமாளே !

“தான்தோன்றி திருப்புகழ்”

பிறவி வினைகளின் பயனால் வரும் துன்பம் மற்றும் துயரங்களை பெறுவதற்கு இடமாக நீரால் வளருவதுமான இந்த உடல்….

நோய்கள் சூழ்ந்து கொண்டு, இந்த உலகில் தளர்ச்சி உற்று, குட்டு குலைந்து கடைசியில் நெருப்பில் எரிந்து சாம்பல் பொடி ஆகிவிடும் தன்மையை உணராமல்…

விரும்பி விரைவுடன் சென்று நல்ல கல்வி நூல்களில் ஆழ்ந்து ஆய்ந்து அறிந்து நிரம்பப் பொருள் தேடவேண்டி,பொற் கலப்பையைக்
கொண்டு வயலை உழுபவர்கள் போல…

மனம் வேகும் தன்மையும் ஒழிந்து, வினை பெருகும் நிலைமையும் நீங்கி, நற்கதி விளையும்படியான தகைமையில், தாமரை போன்ற உனது திருவடிகளை தொழுவதற்கு கருணை புரிந்து அருள்வாய் !

பொன் வளையல்களை அணிந்த மாதர்கள் வள்ளி, தேவயானை தாம் இருவரும் அணைந்துள்ள நல்ல புயமும் தோன்ற,
ஆகாயத்தை அளாவும்படி மயிலின் மீது ஏறி…

கீழே மிக ஆழ்ந்துள்ள கடலில் விழுந்து நெருங்கியிருந்த (எழு) கிரியில் வாழ்ந்த
அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலனே !

வாழ்வுற்று மேலான செந்நெறி வாய்க்கப் பெற்று, ஆய்ந்த ஒழுக்கத்தில் உள்ள நல்ல தவசிகளும், விண்ணுலகத்தில் வாழும்
பிறரும் உன் திருவடியைப் போற்றி புகழும்…

ஆதி பரம்பொருளே ! தானே தோன்றி சுயம்பு மூர்த்தியாய் (சுயம்பு லிங்கமாக ) நிற்க வல்ல தேவர்களின் துயர் போக்கி அவர்களுக்கு நல் வாழ்வளித்த பெருமாளே
பாடல் :

சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர் தூண்போன்ற இக்குடிலு …… முலகூடே

சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு தோம்பாங்கை யுட்பெரிது …… முணராமே

வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள் வேண்டீங்கை யிட்டுவர …… குழுவார்போல்

வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை வாம்பாங்கில் நற்கழல்கள் …… தொழஆளாய்

வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள் வான்தோன்று மற்றவரு …… மடிபேண

மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும் வான்தீண்ட வுற்றமயில் …… மிசையேறித்

தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர் சாய்ந்தேங்க வுற்றமர்செய் …… வடிவேலா

தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ தான்தோன்றி நிற்கவல …… பெருமாளே.

ஓம் சரவண பவ !

ஓம் சரவண பவ குக சண்முகா சரணம் சரணம்

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »