இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் ஸ்ரீ கைச்சினநாதர் கோவில் கச்சனம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்
ஸ்ரீ கைச்சினநாதர் கோவில்
கச்சனம்

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்கிறார்.

மூலவர்: கைச்சினநாதர், கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர்
தாயார்: பல்வளை நாயகி, சுவேதவளை நாயகி, வெள்வளை நாயகி
தல விருட்சம்:கொங்கு, இலவம்
தீர்த்தம்:இந்திரதீர்த்தம்,வச்சிர தீர்த்தம், அகத்திய தீர்த்தம்
புராண பெயர்(கள்):
கைச்சினம், கோங்குவனம், கர்ணிகாரண்யம்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும்.

கச்சனம் கைச்சின்னேசுவரர் கோயில் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும்.

சம்பந்தரால் பாடல் பெற்றது இத்தலம்.

இத்தலத்தில் இந்திரன் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டு அதனை எடுத்து வைக்கும் போது அவர் கை அடையாளம் சுவாமி மீது படிந்தது. எனவே
கைச்சின்னம் என்ற பெயர் பெற்றது. இது தற்போது வழக்கில் கச்சனம்
என்றாயிற்று. சுவாமி மீது விரல்கள் பட்ட அடையாளம் உள்ளது.

இந்திரன் ஐராவதத்தின் தந்தம் கொண்டு வளையல்கள் செய்து அம்பிகைக்கும் அணிவித்ததால்
அம்மன் வெள்வளைநாயகி ஆனார்.

முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால்
கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு.

சிறப்புகள்

இக்கோயில் மதுரை ஆதினத்திற்கு சொந்தமானது.

இந்திரன், அகத்தியர், திருணபிந்து முனிவர், அஷ்டவசுக்களில் விதூமன், மித்ரசகன் ஆகியோர் இக்கோவிலை வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட முருகப்பெருமான் இத்தலத்தில் அருள்கிறார்.

அகத்திய மகரிஷிக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதோடு, அவருக்கு இங்கே தியாகராஜராக காட்சி தந்தருளியுள்ளார் ஈசன்.

தல வரலாறு

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான்.
கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர்.எனவே சேவலாக உருவெடுத்து ஆசிரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார்.அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது” என்று சொல்லி விட்டு,அகலிகையுடன் சேர்ந்து இருந்தான்.
இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார்

அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் இராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லாக மாற்றினார்.

இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார்.
இந்திரனின் உடல் முழுவதும் 1000 யோனிகள் ஆகக் கடவதென சாபமிட்டார். இதனால் வானுலகில் வாழ வெட்கித்து, பூவுலகம் வந்தான் தேவேந்திரன். பிருத்வி தலமாகவும், கமல தலமாகவும் விளங்கும் திருவாரூரில், சர்வேஸ்வரனை நோக்கித் தவமிருந்தான். அப்போது ஈசனின் அசரீரி வாக்கு ஒலித்தது. அதன்படி கோங்கு வனமான கச்சனம் திருத்தலத்தை வந்தடைந்தான். தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினான். அந்த தீர்த்த நீரால் மணல் லிங்கம் பிடித்து, தொடர்ந்து பூஜை செய்து வந்தான்.

வைகாசி மாத விசாக நட்சத்திர நன்னாளில், தான் பூஜித்து வந்த மணல் லிங்கத்தை தீர்த்தக் குளத்தில் கரைத்து பூஜையை முடித்திட எண்ணி, லிங்கத்தைக் கலைக்க முற்பட்டான். ஆனால் அந்த லிங்கம் பூமியை நிலையாகப் பற்றிக் கொண்டது. அதனை அசைக்க முற்பட்டதன் காரணமாக தேவேந்திரனின் கை விரல்கள் அந்த மணல் லிங்கத்தின் நெற்றியில் பதிந்தது.

உடன் பரமன் அங்கே தோன்றி, இந்திரனின் உடலில் இருந்த 1000 யோனிகள், 1000 கண்களாக மாற அருள் புரிந்தார். இதனால் இந்திரனுக்கு சகஸ்ராக்ஷன் எனும் பெயர் ஏற்பட்டது. சகஸ்ரம் எனில் ஆயிரம் என்றும் அக்ஷம் எனில் கண் என்றும் பொருள். சிவனாரை வணங்கி மகிழ்ந்த இந்திரன், ‘இத்தலத்தில் நீராடி, உம்மை வந்து வணங்கும் யாவருக்கும் சகல வரங்களையும் அருள வேண்டும்,’ என கேட்க, அப்படியே அருளினார் அரனார்.

இந்திரனின் கை அடையாளம் (சின்னம்) லிங்கத்தின் மீது பாதித்துள்ளது இப்போதும் காணலாம்.

கோவில் அமைப்பு

கோயிலுக்குள் ஒரு பிராகாரமும் மதிலை அடுத்து ஒரு பிராகாரமும்,
வெளிவீதியில் உள்ளன.
உள் பிராகாரத்தில் மேற்கில் விநாயகர்
அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம்,

சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜ
மண்டபம் உள்ளது.

மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும்
உள்ளது. இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான நஞ்சையில் வெட்டும் பொழுது
கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள்சிலை, உள்பிராகாரத்தில்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி – ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது. (பின்புறத்தில் நந்தி உள்ளது
தெரிகிறது) நடனச் சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக
உள்ளன.
எல்லோருக்கும் வீரம் மட்டும் போதாது.
ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும்,அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.

இத்திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுகள் காணப்பெற்றுள்ளன.
அவைகளில் இக்கோயிலுக்கும் பிறவுக்கும் அளிக்கப்பட்ட நிபந்தங்கள் –
நிலபுலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனுக்கு, ‘கோங்கு
இலவுவனேஸ்வரசுவாமி, திருக்கைச்சின்னம் உடைய நாயனார்,
கரச்சின்னேஸ்வரர்’ முதலிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. பூஜைகள்,
வழிபாடுகள் முதலியவை செம்மையாக நடைபெறுகின்றன. விசேஷ நாள்களில்
சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும்
சார்த்தப் பெறுகின்றன.

பேய் பிடித்தல் போன்ற
தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக சொல்லப்படுகிறது.

பிரார்த்தனை:

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

காலை 6 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழா:

வைகாசி விசாகத்தில் கோயிற் பெருவிழா பத்துநாள்களுக்கு
நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை ஞாயிறு நாள்கள்,
மார்கழித் திருவாதிரை, மாசிமகம், பங்குனி உத்திரம் முதலிய விசேஷ
காலங்களிலும், பிரதோஷ காலங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது.
கந்தசஷ்டிவிழா சிறப்பாக நடத்தப்பெறுகிறது.

கும்பகோணத்தில் இருந்து 61km.

கும்பகோணத்தில் இருந்து குடவாசல்
வழியாக திருவாரூர் வந்து
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில்
திருக்காவாசல் அருனளயம் அடுத்து கச்சனம்.
திருவாரூரிலிருந்து 15 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் உள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »