லிங்க புராணம் – அரி, அயன் கண்ட ஜோதி


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பிரகிருதித் தத்துவமே ஒளிப் பிழம்பாய் லிங்கமாய் மாறியது. திங்கள் முடிசூடி, நஞ்சுண்ட முக்கண்ணனே அந்த லிங்கமாகி நின்றான். பிரளய வெள்ளத்தில் ஆதிசேஷன் மீது நாராயணன் யோக துயில் கொண்டு இருந்தான். நித்திரை கலைந்து எழுந்த பிரமன் உலகை மீண்டும் படைக்க எண்ணுகையில் பிரளய நீரில் மாதவனைக் கண்டார். நாராயணன் தானே சகல உலகங்களையும் தோற்றுவிப்பவன் என்றான். ஈரேழு புவனங்களையும் அனைத்து உயிர்களையும் படைப்பவன் நானே என்றான் பிரம்மன். இருவரில் யார் பெரியவன் என்ற போட்டி துவங்கி சண்டையாக மாறியது. அவ்வமயம் அங்கே அவர்கள் எதிரில் ஓர் ஒளி தோன்றியது. அதன் அடிமுடி காணப்படாததால் அது என்ன என்று இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அதன் முடியைக் காண அன்னப்பறவை வடிவில் பிரம்மன் புறப்பட, அடியைக் காண வராக வடிவில் நாராயணன் புறப்பட்டான். இருவரும் முடி, அடி காணமுடியாமல் களைத்துத் திரும்பி வந்து ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அவர்கள் அகந்தை அகன்றது. இருவரும் கைகூப்பி அனற்பிழம்பாக, ஜோதி லிங்கமாக நிற்கும் அப்பொருளை வணங்கினர். அண்டம் கிடுகிடு என நடுங்குமாறு பேரொலி ஒன்று கேட்டது. அப்போது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையில் பிறைச்சந்திரன் கைகளில் மான் மழுவேந்தி எம்பெருமான் தரிசனம் அளித்தார். இருவரும் வணங்கினர். அவர்கள் அப்பொருளைப் பலவாறு போற்றி சிரம்தாழ்த்த, கரம்கூப்பி, ரோமாஞ்சனம் பெற்றவராய் வணங்கினர்.

மகிழ்ச்சி அடைந்த ஈசனார் தன் வலப்புரத்தில் தோன்றியவன் மலரோன் என்றும், இடப்புறத்தில் தோன்றியவன் திருமால் என்றும் கூறி இருவரும் தம் மக்களாகிய முருகன், கணபதிக்கு ஒப்பானவர்கள் என்றுரைத்து வேண்டுவதைக் கேட்குமாறு பணித்தார். நான்முகன் அவருடைய அருளைப் பெற்ற தனக்கு வேறென்ன வேண்டும் என்று கூறி சிவனாரிடம் என்றும் குறையாத பக்தி அருள் செய்யுமாறு வேண்டினார். அவ்வாறே என்று அருள்பாலித்தார் பரமன். மாதவனிடம் பத்ம கற்பத்தில் நான்முகன் அவருக்குப் புத்திரனாக உந்திக் கமலத்தில் தோன்றுவான் என்று அருளினார். அன்று முதல் ஈசனார் லிங்க வடிவில் அடியவர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தொடரும்…

ப்ரம்மா முராரி சுரர்ச்சித லிங்கம்!
#திருநாவுக்கரசர்_தேவாரம்.
#ஐந்தாம்_திருமுறை.
_திருஅண்ணாமலை
🌙🌺#வட்டனைம்_மதிசூடியை🌺🌙
திருக்குறுந்தொகை.

திருச்சிற்றம்பலம்.

#வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ. 1.

#வான னைம்மதி சூடிய மைந்தனைத்
தேன னைத்திரு வண்ணா மலையனை
ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆன னையடி யேன்மறந் துய்வனோ. 2.

#மத்த னைம்மத யானையு ரித்தவெஞ்
சித்த னைத்திரு வண்ணா மலையனை
முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த
அத்த னையடி யேன்மறந் துய்வனோ. 3.

#காற்ற னைக்கலக் கும்வினை போயறத்
தேற்ற னைத்திரு வண்ணா
மலையனைக்
கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த
ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. 4.

#மின்ன னைவினை தீர்த்தெனை
ஆட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா
மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. 5.

#மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேல்
சென்ற னைத்திரு வண்ணா மலையனை
வென்ற னைவெகுண் டார்புர
மூன்றையுங்
கொன்ற னைக்கொடி யேன்மறந்
துய்வனோ. 6.

#வீர னைவிட முண்டனை விண்ணவர்
தீர னைத்திரு வண்ணா மலையனை
ஊர னையுண ரார்புர மூன்றெய்த
ஆர னையடி யேன்மறந் துய்வனோ. 7.

#கருவி னைக்கடல் வாய்விட
முண்டவெம்
திருவி னைத்திரு வண்ணா மலையனை
உருவி னையுண ரார்புர மூன்றெய்த
அருவி னையடி யேன்மறந் துய்வனோ. 8.

#அருத்த னையர வைந்தலை நாகத்தைத்
திருத்த னைத்திரு வண்ணா
மலையனைக்
கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.9.

#அரக்க னையல றவ்விர லூன்றிய
திருத்த னைத்திரு வண்ணா
மலையனை
இரக்க மாயென் உடலுறு நோய்களைத்
துரக்க னைத்தொண்ட னேன்மறந்
துய்வனோ. 10.

திருச்சிற்றம்பலம்.

தருமை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளிய

#சிவபோக_சாரம்

பாடல்: 31

அலைவற் றிருந்த அறிவுநீ ஆங்கே நிலைபெற் றிருந்தசுக ஞேயம் – மலைவற்
றிருந்ததுகண் டாயே இருந்தபடி அத்தோ(டு)
இருந்துவிடெப் போதும் இனி.

பொழிப்புரை:

தத்துவங்களில் சென்றலையாது அவற்றினீங்கி நின்ற அறிவாகிய நீ அங்ஙனம் நீங்கிநின்ற நிலைக்கண், நின்றுழி நில்லாது திரியும் அத்தத்துவங்கள் போலன்றி நிலைபெற்றுத் தோன்றுகின்ற இன்ப வடிவினதாகிய ஞேயப்பொருள் தெளிவுபடத் தோன்றுதலைக் கண்டாயன்றே! இனி அஞ்ஞேயப் பொருளிருந்தவாறு அதனோடே எப்போதும் நீங்காதிருந்துவிடு.

#குருபாதம்

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »