






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் அரசாட்சி செய்தவன், முதலாம் குலோத்துங்கச் சோழன். இவனது மகள் ‘சித்தவல்லி.’ மகளின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த குலோத்துங்கன், தன் ஆளுகையின் கீழ் இருந்த பல ஊர்களுக்கு தன் மகளின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். திருவிடைமருதூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் அருகே சித்தவல்லி பெயரில் பல ஊர்கள் உள்ளன.
அப்படி திருநெல்வேலியை அடுத்த 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ‘சித்தவல்லி’ என்ற சிற்றூர் தான், தற்போது மருவி ‘சுத்தமல்லி’ என்றழைக்கப்படுகிறது. தந்தையின் ஆளுமைக்கு கீழ் உள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்த சித்தவல்லி, இந்தப் பகுதியின் இயற்கைச் சூழல் பிடித்து சில காலம் இங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தாள். மன்னனும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தான்.
தென்மேற்குப் பகுதிக்குச் சென்ற சித்தவல்லி, அங்கு அமைந்திருந்த சிவன் கோவிலில் கந்தர்வன் ஒருவன் வேள்வி செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். இளவரசிக்கு, தானும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதுகுறித்துக் கந்தர்வனிடம் வினவினாள். கந்தர்வனும் ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிவருமாறு அவளுக்கு உபதேசித்தான். அதன்படியே சித்தவல்லியும் மந்திரத்தை ஓதி சிவபதம் அடைய முற்பட்டாள்.
இதற்கிடையில் குலோத்துங்கன், இலங்கையை ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னனாகிய வீரபெருமானுக்கு, சித்தவல்லியை மணம் முடித்து கொடுக்க முடிவெடுத்தான். திருமணம் விமரிசையாக நடந்தது. காலம் செல்லச் செல்ல சித்தவல்லிக்கு, இல்லறத்தின் மீதான ஆர்வம் குறைந்தது. சிவ வழிபாடு செய்வதிலேயே காலத்தைக் கழிக்க விரும்பினாள். உடல் மீதான பற்று அவளுக்கு குறைந்துபோனது.
இதையறிந்த குலோத்துங்கச் சோழன், மனம் வருந்தினான். இருப்பினும் மகள் வழிபாடு செய்வதற்காக, பகவதீஸ்வரர் கோவிலை நிறுவித்தார். இந்தக் கோவிலிலேயே தங்கியிருந்து சிவபூஜை செய்து வந்தாள், சித்தவல்லி. நாளடைவில் அவளது, உடல் ஒளியையும், தெய்வீக சக்தியையும் அடைந்தது. உயிர் மறுமை இன்ப நிலைக்கு உயர்ந்தது.
சித்தவல்லியின் கனவில் தோன்றிய ஈசன், அவளது மன வலிமையை பாராட்டி, அவள் முக்தி நிலையை அடைவதற்கான வழியை கூறி மறைந்தார். இதையடுத்து தான தர்மங்கள் பல செய்து ‘நல்லதாய்’ என்றும் ‘சித்த வல்லி நாச்சியார்’ என்றும் பெயரைப் பெற்றாள். பின்னர் முடிவில் சிவபெருமான் அருளால், முக்தி கிடைக்கப் பெற்று தெய்வ நிலையை அடைந்தாள் என்கிறது இத்தல வரலாறு.
சுத்தமல்லியில் உள்ள பகவதீஸ்வரர் கோவிலில் குலோத்துங்க மன்னன், சித்தவல்லி நாச்சியார் சிலைகள் உள்ளன. இது சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன. இவளது தெய்வநிலைக்குக் காரணமான கந்தர்வன் வணங்கிய சிவன்கோவில், ஊருக்கு தென்மேற்கே ‘கந்தர்வேஸ்வரர் கோவில்’ என்ற பெயரில் உள்ளது. இதனை தவணைக் கோவில் என்றும் அழைப்பார்கள். தாமிரபரணியில் ‘கந்தர்வ தீர்த்தம்’ இருக்கிறது.
பகவதீஸ்வரர் கோவிலின் ஈசான மூலையில்தான், சித்தவல்லி நாச்சியார் என்னும் நல்லதாய் அம்மன் கோவில் உள்ளது. அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவதே உயர்வு. இவ்வாறு கட்டுப்படுத்தியவர்களில் சித்தவல்லியும் ஒருவர். உண்மையான சித்தி ‘ஞானசித்தி’யும், அறிவு சித்தியும்தான். ஞானத்தாலும் அறிவாலும் சித்தி பெற்றவர்களையே ‘சித்தர்’ என்பார்கள். இவ்வரிசையில் பெண் சித்தராக ‘சித்தவல்லி’யும் இடம் பெறுகிறார்.
சித்தவல்லி என்னும் நல்லதாய் நாச்சியார், கோடகன் கால்வாய் கரையில் வடக்குநோக்கி தண்ணீர் பாய்ந்தோடும் இடத்தில் வலப்புறக் கரையில் கம்பீரமாக உள்ளார். அவரை சுற்றி நீர் வளமும், வயல்கள் சூழ்ந்தும் பச்சை மற்றும் மஞ்சள் கம்பளம் விரித்தது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாறி வர்ண ஜாலம் காட்டுகிறது. இவர் பார்வை பட்ட இடமெல்லாம் விளைச்சல்தான்.
இக்கோவிலுக்கு கொடை விழா இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஆடி மாதம் நடைபெறுகிறது. இவ்விழாவில் மிகவும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சி மதுகுடம் பொங்குதல். திருவிழாவின் முதல்நாள் குடத்தில் வைக்கப்படும் நவதானியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பால் பாதியளவு புதிய மண்குடத்தில் ஊற்றப்படும். அந்த பால் சூடு பண்ணாமலேயே பொங்கும். இதை மது குடம் பொங்குதல் என்று கூறுவார்கள்.
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சூறை நடைபெறுகிறது. ஆடிமாதம் கடைசி ஞாயிறு அன்று அன்னாபிேஷகம் நடைபெறும். பவுர்ணமி தோறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மிகவும் சிறப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ராகுகால பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து அம்மனின் அபிஷேகம், அலங்காரம், பூஜையை கண்குளிர வேண்டி நின்றால் தடைப்பட்ட திருமணம் மற்றும் குழந்தைபேறு உள்பட கேட்டவரம் கிடைக்கிறது. இதனால் அம்மனை வணங்க பல்வேறு ஊரில் இருந்து மக்கள் வந்து காத்து கிடக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் மார்க்கமாக சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8-வது கிலோ மீட்டரில், சுத்தமல்லி விலக்கில் இருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் நல்லதாய் அம்மனை தரிசிக்கலாம்.