சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காலசம்ஹாரர்

‘என்றும் பதினாறு வயதுடையவர்’ என்று வரம் பெற்றவர், மார்கண்டேயன். இவருக்கு 16 வயது பூர்த்தியானதும் மரணம் என்ற சாபம் இருந்தது. 16 வயது பூர்த்தியாகும் தருணத்தில் மார்கண்டேயனை கொண்டுசெல்ல, எமன் வந்தார். அப்போது மார்கண்டேயன், சிவலிங்கத்தை தழுவியபடி இருந்தார். காலன் தனது பாசக்கயிற்றை வீச, அது மார்கண்டேயனோடு, சிவலிங்கத்தையும் இழுத்தது. இதனால் கோபம் கொண்டு சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஈசன், எமனை சம்ஹாரம் செய்ததோடு, மார்கண்டேயனுக்கும் 16 வயதுடனேயே இருக்க வரம் அருளினார். திருக் கடையூரில் இந்தத் திருக்கோலக் காட்சியை கண்டு தரிசிக்கலாம்.

திரிபுராந்தகர்

எதிரிகள் எவரும் தாக்க முடியாத வகையில், வலிமையான மூன்று கோட்டைகளை நிறுவி மூன்று அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். சிவபெருமான், நான்கு வேதங்களும் சக்கரமாக அமைந்த தேரில் ஏறிச் சென்று, தனது சிரிப்பால் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்ததோடு, அசுரர்களையும் வதம் செய்தார். இதனால் அவருக்கு ‘திரிபுரநாதர்’, ‘திரிபுராந்தகர்’ என்ற பெயர்கள் வந்தன. திருவதிகை என்ற தலத்தில் அமைந்துள்ள ஆலயம் தேர் வடிவிலும், அந்த தேர் வடிவத்தில் தானும் உறைந்து ஈசன் அருள்பாலிக்கிறார்.

காமசம்ஹாரர்

தனது மனைவியான உமையைப் பிரிந்து, சனகாதி முனிவர்களுக்கு உப தேசம் செய்து தியானத்தில் ஆழ்ந்தார் சிவபெருமான். அவர் மீது காமதேவனாகிய மன்மதன், மலர் அம்புகளை வீசினான். அதனால் தவம் கலைந்து கண் திறந்த சிவபெருமான், கோபத்தால் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து, மன்மதனை எரித்தார். காமன், நெருப்பால் சாம்பலான திருத்தலம், திருக்குறுக்கை என்னும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இது சிவ பெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும்.

சலந்தரதாரர்

சிவபெருமானின் வியர்வைத் துளியில் இருந்து தோன்றியவன், சலந்தரன் என்ற அசுரன். தேவர்களுக்கு பல துன்பங்களை கொடுத்து வந்தான். இதனால் தேவர்கள் அனை வரும், சிவபெருமானிடம் சென்று சலந்தரனின் கொடுமையில் இருந்து காப்பாற்றும்படி கூறினர். ஒரு சமயம் சிவபெருமானின் காலடியில் இருந்த சக்கரத்தை எடுக்க சலந்தரன் முயன்றான். அப்போது அதுவே அவனைக் கொன்றது. இதனால் ஈசனுக்கு, ‘சலந்தரதாரர்’ என்ற பெயர் உண்டானது. இந்த அற்புதம் நடந்த தலம், திருவாரூர் அருகே உள்ள திருவிற்குடி ஆகும்.

பிட்சாடனர்

தவ வலிமை அதிகரித்ததால், அகங்காரத்தால் சிவ பெருமானையே மதிக்க தவறினர், தாருகாவனத்து ரிஷிகள். அவர்களின் அறியாமையை சுட்டிக்காட்ட எண்ணிய சிவபெருமான், அதற்காக எடுத்த வடிவமே ‘பிட்சாடனர். ஈசன், ‘திகம்பரரா’க பிரம்ம கபாலத்தை கையில் ஏந்தி, ரிஷி பத்தினிகளை மதி மயக்கிய அற்புதக் கோலம் இதுவாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »