






உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. அதில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவையும், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாவில் எதிர்சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்தவை. இந்த திரு விழாவை காண உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் மட்டும் நடந்தது.
இதற்கிடையே கள்ளழகர் கோவிலில் கடந்த 3-ந் தேதி தொடங்க இருந்த சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை திட்டமிட்டபடி விழா நடந்து இருந்தால், கள்ளழகர் இன்று (வியாழக்கிழமை) காலையில் வைகை ஆற்றில் இறங்கி இருக்க வேண்டும்.
ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலக புகழ் பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் நடைபெறும் பொருட்டும் நாளை (8-ந்தேதி) கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இவை, பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.thhrce.gov.in என்ற இணையதளம், யூடியூப் மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.