எலும்பு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகமும், பரிகாரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மனித உடல், எலும்புகளால் ஆன கட்டமைப்பால் உருவாக்கப்பட்டு, தசைகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு ‘எலும்பு மண்டலம்’ எனப்படுகிறது. உடலின் முக்கிய உறுப்புகளான மூளை, நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகளை எலும்பு மண்டலங்கள் பாதுகாக்கிறது. எலும்புகள் சீராக இருந்தால் மட்டுமே தசைகள் மற்றும் உடல் பாகங்கள் சிறப்பாக இயங்கும்.

ஒருவருக்கு வரும் நோய்களை 3 விதமாக பிரிக்கலாம். அவை:- வாதம், பித்தம், கபம் ஆகியவை. வாத நோய்க்கான காரக கிரகங்கள் சனி, புதன், ராகு. இது காற்று மற்றும் நிலத் தத்துவத்தை கொண்டது. அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம். உதாரணமாக பக்கவாதம், ஜீரணக் கோளாறு, வாயு பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு போன்றவற்றைக் கூறலாம். அத்துடன் குளிர்காலங்களில் காலை எழுந்தவுடன் அல்லது அதிக நேரம் உட்கார்ந்து விட்டு நடக்கும் போது கால் பாதத்தில் இறுகப் பிடித்துக் கொள்ளும். ஒரு சில நிமிடங்களுக்கு கால் பிடிப்பு நீடித்து பின் சகஜ நிலைக்கு வரும். இதுவும் வாதத்தில் இது ஒரு வகைதான்.

பித்த நோய்க்கு காரக கிரகம் சூரியன், செவ்வாய், கேது. இவை நெருப்புத் தன்மை கொண்டவை. உடல் சூடு, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்கடுப்பு, மூலம், அலர்ஜி, அரிப்பு, அல்சர், குடல்புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி, தலைசுற்றல், வாந்தி, படபடப்பு முதலானவை பித்தம் சம்பந்தப்பட்டவைதான்.

கபத்திற்கான காரக கிரகம் சந்திரன் மற்றும் சுக்ரன். இவை நீர் தத்துவத் தன்மை கொண்டவை. சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, சீதளம், பேதி, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரக செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று ஆகியவை கபம் சார்ந்தது.

ஒருவரின் நோய் தன்மை மூன்று விதமாக இருந்தாலும் கூட, வாதம் தொடர்பான ‘ஆர்த்ரைடிஸ்’ என்று கூறப்படும் எலும்பு பிரச்சினைகளால், சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் வயது வித்தியாசம் இன்றி பாதிக்கப்படுகின்றனர். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கிறது.

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த கிரகத்தின் சாரத்தில் இருக்கிறாரோ, அதைப் பொறுத்து அவர்களுடைய நோயின் தன்மையை தீர்மானிக்கலாம். ராகுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு அதிகமாக வேலை செய்யும். கேதுவோடு இணைந்த கிரகத்தின் உடல் உள்ளுறுப்பு சரியாக வேலை செய்யாது.

ஒரு சிலருக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள், குறுகிய காலத்திற்கு சிறிய பாதிப்பை தரும் விதமாக இருக்கும். ஒரு சாரருக்கு நீண்ட நாள் பிரச்சினையாகவும், அறுவை சிகிச்சை செய்யும் நிலையையும் ஏற்படுத்திவிடும். வயது வேறுபாடு இன்றி கடுமையாக ஒருவரை தாக்கும் மூட்டு, எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்பட காரணம் சனி பகவானே. சராசரியாக ஒரு மனிதன் தன்னுடைய ஆயுள் காலத்தில் குறைந்த பட்சம் 30 ஆண்டுகள் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி என சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் இருக்க முடியும். ராசி மண்டலத்தை சுற்றி வர 30 ஆண்டு கால அவகாசம் எடுக்கும். இவர் உடல் உறுப்பில் கால்களை குறிப்பவர்.

கோச்சார சனி பகவான், ஜனன கால ஜாதகத்தில் உள்ள கிரகங்களுடன் சம்பந்தம் பெறும் போது, தசாபுத்திக்கு ஏற்ப எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் சனி பலம் குறைந்து நீச்சம், அஸ்தமனம், வக்ரம், குறைந்த பாகை பெற்றிருந்தால், அந்த நபருக்கு வம்சாவளியாக எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும்.

ஜனன கால ஜாதகத்தில் சனி வலுப் பெற்றவர்களுக்கு, கோச்சாரத்தில் சனியுடன் ராகு -கேதுக்கள், சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெறும்போது தசாபுத்திக்கு ஏற்ப குறுகிய காலத்திற்கு பாதிப்பு இருக்கும்.

சனி பகவான், ஜனன ஜாதகத்தில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு, உடலில் எலும்பு பாதிப்பு இயல்பாகவே இருக்கும். லக்னம் பலம் பெற்றவர்களுக்கு பாதிப்பு சிறிதாக இருக்கும். வைட்டமின் ஈ குறைந்தவர்களுக்கும் எலும்பு தொடர்பான பாதிப்பு இருக்கும்.

அறுவை சிகிச்சை மூலம் நிவாரணம் பெற விரும்புபவர்கள், கோச்சார குரு லக்னாதிபதிக்கு சாதகமாக இருக்கும் காலகட்டத்தில் சிகிச்சை செய்வது நல்லது.

பரிகாரம்

உடலில் காற்றுத் தன்மை மிகுதியாக உடையவர்கள், எளிதில் செரிமானமாகும் உணவை உண்ண வேண்டும். தினமும் உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். இது எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை உடலுக்கு தரும். பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

சனிக்கிழமை காலை 9 -10.30 மணி வரை வரும் ராகு வேளையில், இனிப்பு கலந்த எள் உருண்டையை கருப்பு நிற பசு மாட்டிற்கு தர வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் ராகு வேளையில் ராகுவின் அதிதேவதை துர்க்கையை பூஜிக்க வேண்டும்.

கருப்பு நிற திராட்சை பழ ரசத்தை, அமாவாசை அன்று காளி அம்மனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். கருப்பு நிற உளுந்தை தானம் தர வேண்டும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »