பக்தி இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பான்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கிருஷ்ணரின் இறுதி காலம் வரை அவருடனேயே பயணித்தவர், உத்தவர். கிருஷ்ணருடன் அதீத நட்புடன் பழகியவர்கள் இருவர். ஒருவர் வசுதேவரின் சகோதரி குந்தியின் மகனான அர்ச்சுனன். மற்றொருவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர். மகாபாரத போரின் போது கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு செய்த உபதேசம் ‘பகவத்கீதை’ என்று அழைக்கப்படுவது போல, தன்னுடைய இறுதி காலத்தில் உத்தவருக்கு கிருஷ்ணர் செய்த உபதேசம் ‘உத்தவ கீதை’ என்று புகழப்படுகிறது.

ஒரு முறை கிருஷ்ணரிடம் சில சந்தேகங்களைக் கேட்டறிந்தார், உத்தவர். அதில் ஒரு சந்தேகத்திற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

“கண்ணா.. குருசேத்திரப் போருக்கு முன்பாக, பாண்டவர்களுக்காக நீங்கள் அஸ்தினாபுரம் சென்று கவுரவர்களிடம் தூது போனீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் தங்குவதற்காக தனது பிரமாண்ட அரண்மனையில் மிகப் பெரிய அறை ஒன்றை துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான். பல வகை உணவுகளோடு விருந்தும் தயார் செய்து வைத்திருந்தான். அனைவரும் பிதாமகர் என்று அழைக்கும் பீஷ்மரும் கூட உங்களை அங்கு வந்து தங்கும்படி அழைத்தார்.

ஆனால் நீங்களோ, துரியோதனனின் அரண்மனையையும், விருந்து உபசாரத்தையும் உதறித் தள்ளிவிட்டு, விதுரரின் குடிசையில் போய் தங்கினீர்கள். அதோடு அவர் மனைவி தயார் செய்து வைத்திருந்த மோரை மட்டுமே அருந்தி பசியாறினீர்கள். துவாரகைக்கு மன்னராக இருக்கும் தாங்கள், அரண்மனையில் தங்காமல், விதுரரின் குடிசையை மனம் உவந்து ஏற்றுக்கொண்டதன் காரணம் என்ன?” என்று கேட்டார், உத்தவர்.

அதற்கு பதிலளித்த கிருஷ்ணர், “என் மனதிற்கு நெருக்கமான உத்தவரே.. தடபுடலான விருந்து, தங்குவதற்கு பிரமாண்ட அறை இருந்தும், விதுரரின் குடியில் இருந்த ஒன்று, துரியோதனனின் அரண்மனையில் இல்லையே” என்றார்.

அதைக் கேட்ட உத்தவர், “கிருஷ்ணா.. விதுரரின் குடிசையில் அப்படி என்னதான் இருந்தது? அது ஏன் துரியோதனனின் அரண்மனையில் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

“உத்தவரே.. விதுரரின் குடிசையில் இருந்ததும், துரியோதனனின் அரண்மனையில் இல்லாததும் ‘பக்தி’தான். துரியோதனன் எனக்காக நிறைய ஏற்பாடுகளை செய்ததோடு, நல்ல விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தாலும், ‘பார்.. நான் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன்’ என்று நினைக்கும் ஆணவம் மிகுந்திருக்கிறது. அதுவே பக்தியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு எனக்காக, விதுரரும், அவர் மனைவியும் அளித்த மோர், என் மனதை குளுமைபடுத்துவதாகவும், என் பசியை போக்குவதாகவும் இருந்தது. எப்போதும் பக்தியிடம்தான் திருப்தி அடைகிறேன்” என்று கூறினார், கிருஷ்ணர்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »