அகோர முகத்தில் சிவபெருமானின் திருவுருவங்கள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சிவபெருமானின் வடிவங்களை ‘மூர்த்தங்கள்’ என்றும் கூறுவார்கள். சிவபெருமான் 64 வடிவங்கள் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என்கிற 5 முகங்களில் இருந்து இந்த வடிவங்களை அவர் எடுத்தார். இந்த 64 வடிவங்களில் 25 வடிவங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இதில்அகோர முகத்தில் இருந்து தோன்றிய 5 வடிவங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தட்சிணாமூர்த்தி

சிவாலயங்கள் அனைத்திலும் தென்திசை நோக்கி இடம்பெற்றிருப் பவர் தட்சிணாமூர்த்தி. இவரை ‘தென் முகக் கடவுள்’ என்றும் அழைப்பார்கள். கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, சனகாதி முனிவர்கள் நால்வருக்கு ஞான உபதேசம் அளிக்கும் திருக்கோலம் இவருடையது. இதனால் அவரை ‘குரு’ என்று போற்றுவார்கள். மயிலாடுதுறை, ஆலங்குடி, திருப்பூந்துருத்தி போன்ற ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அழகான வடிவங்கள் இருப்பதைக் காண முடியும்.

வீரபத்திரர்

ஒரு சாபம் காரணமாக, பூலோகத்தில் தட்சனின் மகளாக பிறந்தார், பார்வதி தேவி. அவர் சிவபெருமானையே நினைத்து, அவரையே மணம் முடித்துக் கொண்டார். தன் விருப்பத்தைக் கேட்காமல், மகளை மணம் முடித்த காரணத்தால் சிவபெருமான் மீது தட்சன் கோபம் கொண்டான். பின்னாளில் அவன் நடத்திய மிகப்பெரிய யாகத்திற்கு பிரம்மன், விஷ்ணு, தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் அழைத்தவன், சிவபெருமானை அழைக்கவில்லை. அவருக்கு சேரவேண்டிய அவிர்பாகத்தையும் வழங்க மறுத்தான். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, தட்சன் யாகசாலைக்கு சென்று அவனுக்கு சாபம் அளித்ததோடு, அந்த யாக குண்டத்திலேயே விழுந்து உயிர் துறந்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த ஈசன், தட்சனையும் அவனது யாகத்தையும் அழிக்க, தன்னுடைய வியர்வைத் துளியில் இருந்து வீரபத்திரரை உருவாக்கினார். தட்சனின் யாகத்தை நிர்மூலமாகிய வடிவமே ‘வீரபத்திரர்.’ திருவெண்காடு, திருப்பறியலூர் ஆகிய தலங்களில் இந்த திருவடிவத்தைக் காணலாம்.

கஜசம்ஹார மூர்த்தி

தாருகாவனத்து ரிஷிகள் அனைவரும், சிவபெருமானை அழிக்க யாகம் செய்தனர். அந்த யாக குண்டத்தில் இருந்து யானை ஒன்று வெளிப்பட்டது. அது சிவபெருமானை நோக்கி பாய்ந்தது. அந்த யானையை அழித்த ஈசன், அதன் தோலை கிழித்து அதனை தன் மேலாடையாக போர்த்திக்கொண்டார். இதனால் அவருக்கு ‘கஜசம்ஹார மூர்த்தி’ என்ற பெயர் வந்தது. இந்த திருக்கோல காட்சியை, வழுவூர் என்ற திருத்தலத்தில் காணலாம்.

கிராதமூர்த்தி

மகாபாரதப் போரில் வெற்றிபெறுவதற்காகவும், அதற்காக சக்திவாய்ந்த அஸ்திரம் வேண்டியும் அர்ச்சுனன் தவம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு பன்றி, அவனது தவத்தைக் கலைக்க வந்தது. அதன் மீது அம்பு தொடுத்தான் அர்ச்சுனன். அதே நேரம் அந்த வனத்தில் வேட்டையாட வந்த வேடன் ஒருவனும் அந்த பன்றியின் மீது அம்பு விட்டான். இருவரில் யார் விட்ட அம்பு பன்றியை கொன்றது என்பதில், அர்ச்சுனனும், வேடனும் சண்டை ஏற்பட்டது. இறுதியில் வேடனாக வந்தது சிவபெருமான் என்பதை உணர்ந்த அர்ச்சுனன் அவரிடம் சரணடைந்தான். இதையடுத்து அர்ச்சுன னுக்கு, ‘பாசுபதம்’ என்ற அஸ்திரத்தை வழங்கினார், ஈசன். இந்தத் திருவுருவத்தை சிதம்பரத்துக்கு அருகில் உள்ள திருவேட்களம் என்ற தலத்தில் தரிசிக்கலாம்.

நீலகண்டமூர்த்தி

அமிர்தம் பெறுவதற்காக அசுரர்களும், தேவர்களும், மேரு மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது முதலில் கடலுக்குள் இருந்து நஞ்சு வெளிப்பட்டது. உலகத்தையே அழிக்கும் வல்லமைகொண்ட அந்த விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர். அப்போது சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் அவரது உடல் முழுவதும் பரவினால், உலக உயிர்களுக்கு ஆபத்து விளையும் என்று எண்ணிய பார்வதி, விஷமானது ஈசனின் உடலுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தை அழுத்திப் பிடித்தார். இதனால் கழுத்துப் பகுதியிலேயே விஷம் நின்றது. சிவபெருமானின் கழுத்து நீலநிறமாக மாறியது. இதன் காரணமாகவே சிவன் ‘நீலகண்டமூர்த்தி’ என்று பெயர் பெற்றார். ஆலகால விஷத்தை உண்டதால் ஏற்பட்ட மயக்கத்தோடு, கண் அயர்ந்தபடி அம்பிகையின் மடியில் தலைவைத்து சயன கோலத்தில் இருக்கும் இடம் ‘சுருட்டப்பள்ளி’ ஆகும்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »