நல்ல வளமான வாழ்வை தரும் வேலவன் விரத வழிபாடு


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2-ம் படைவீடாகவும், பழனியை 3-ம் படைவீடாகவும், திருவேரகத்தை 4-ம் படைவீடாகவும், திருத்தணியை 5-ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6-ம் படைவீடாகவும் கொண்டவன் அந்த ஆறுபடைவீட்டு அழகன். வாரி வாரி அருள் வழங்கும் அந்த வள்ளலை, வைகாசி விசாகத்தன்று இல்லத்துப் பூஜையறையில் அவனுக்குப் பிடித்த மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்தும், வாழைப்பழம் வைத்தும், கந்தரப்பம் வைத்தும் வழிபட்டு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக அமையும்.

வாரியார் சுவாமிகள் “முருகு, முருகு என்று நீ உருகு உருகு” என்பார். அந்த முருகப்பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம் என்று சொல்வார். காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் கடவுளாகிய ருத்திரன், படைக்கும் கடவுளாகிய காமலோற்பவன் ஆகிய மூவரின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் “முருகா” என்ற பொருள் கிடைக்கும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணம் போதித்தவர் என்றும், அவ்வையாருக்கு நாவல் கனி மூலம் தத்துவ ஞானத்தைப் போதித்தவர் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானை, விசாகத்தன்று உள்ளம் உருகி, கவசபாராயணம் செய்து வழிபட்டால் கடமையில் உள்ள தொய்வு அகலும்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங் களைக் கொண்டாடும் பொழுது அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும்.

அதிலும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதம்இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும், வருங்காலம் நலமாக உருவாகும். முருகப்பெருமானை நினைத்துக் கவசம் படித்தால் காரிய வெற்றி கிட்டும். பதிகம் படித்தால் படிப்படியாய் துயர் தீரும். துதிப்பாடல் படித்தால் தொல்லைகள் அகலும்.

இந்த இனிய நாள் தான் வைகாசி 22-ம் தேதி வியாழக்கிழமை (4.6.2020) அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் அவனது தந்தை சிவன், உமையவள், நந்தியைக் கொண்டாடும் பிரதோஷம் வருகிறது. எனவே தந்தை சிவனின் வழிபாடும், மூலமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் வழிபாடும், கந்தனின் வழிபாடும் நாம் மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குறிப்பாக நோய்த்தொற்று பரவி மக்கள் மனக்கவலையில் இருக்கும் இந்த நாளில் நமது ஒவ்வொரு அங்கங்களையும் வேல்கொண்டு காக்க என்று இடம்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் செய்தால் நோயின் தாக்குதலிலிருந்து விடுபட இயலும்.

முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. சரவணப் பொய்கையில் தோன்றியதால் ‘சரவணபவன்’ என்று அழைப்பர். கங்கையில் வளர்ந்ததால் ‘காங்கேயன்’ என்று கூறுவர். ஆறுமுகம் கொண்டதால் ‘சண்முகன்’ என்று சொல்வர். கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்று கூறுவர்.

மயிலில் ஏறுவதால் ‘மயில் வாகனன்’ என்பர். பக்தர்கள் மனக்குகையில் வாழ்வதால் ‘குகன்’ என்பர். தந்தைக்கு உபதேசம் செய்ததால் ‘சுவாமிநாதன்’ என்பர். பிரம்மத்தில் உயர்ந்ததால் ‘சுப்ரமணியன்’ என்பர். கடம்ப மலரை உடையவன் என்பதால் ‘கடம்பன்’ என்பர். பட்சி வாகனன் என்பதால் ‘விசாகன்’ என்பர். இதுமட்டுமின்றி ‘வேலன்’ என்றும், ‘சேவற் கொடியோன்’ என்றும், ‘குமரன்’ என்றும் அழைக்கப்படும் முருகப்பெரு மானுக்கு வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு அதன் பின்னர் முருகப்பெருமான் படத்தின் முன்னால் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகைப் பரிமளப் பொருட்களை இணைத்து, ஐந்து வகை நைவேத்தியம் வைத்தும் அத்துடன் மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்து “திருப்புகழ்” பாட வேண்டும். திருப்புகழ் பாடினால் எதிர்ப்புகள் அகலும். இனிய வாழ்வு மலரும். ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது சான்றோர் மொழி.

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து இல்லத்தில் இருந்தபடியே வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம் பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் போன்றவைகளைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத் திருக்கிறார்கள்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »