இறைவனின் நாமத்தை அனுதினமும் உச்சரித்தாலே போதும்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள், விரதம் இருந்து தங்களின் விருப்ப தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து தங்கள் துன்பங்களுக்கு தீர்வுத் தேடுகிறார்கள். ராம நாமத்தின் மகிமையையும், சிவநாமத்தின் மகிமையையும் பல மகான்கள் நமக்கு உபதேசங்களாக உணர்த்தியுள்ளனர்.

“தினமும் காலை வேளையில் நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன் சிவ நாமத்தையும் சொல்லுங்கள்” என காஞ்சி பெரியவர் கூறியிருக்கிறார்.

‘காசு இருந்தால்தான் கடவுள் கண் திறப்பாரா?’ என்று பலரும் சந்தேகிக்கிறார்கள். அபிஷேகங்களும், ஆராதனைகளும், அலங்காரமும் மட்டுமே இறைவனை திருப்தி செய்வதில்லை. மனதார நினைத்து அவனின் நாமத்தை நாம் அனுதினமும் உச்சரித்தாலே போதும், இறைவனின் அருள்பார்வை நமக்கு கிடைத்து விடும்.

அந்த ஊரில் கோவில்கள் ஏராளம். தினமும் பக்தர்கள் பஜனை பாடல்களைப் பாடியபடி மக்கள் நிறைந்த வீதிகளில் செல்வார்கள். அதே ஊரில் பஜனை பாடுபவர்களை கேலி செய்த ஒருவனை, நீண்ட நாட்களாக கவனித்து வந்தார் ஒரு ஞானி. ஒருநாள் சிலர், வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தனா். அதை, வழக்கம் போல் கேலி செய்த அந்த இளைஞரை, ஞானி அழைத்தார்.

அவனுக்கு ராம நாமத்தை உபதேசித்து, அதன் உன்னதத்தைப் பற்றியும், எந்தக் காரணம் கொண்டும், நாம உச்சரிப்பை கைவிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும் “ஆத்மார்த்தமாக ஒரு முறையாவது சொல்லிப்பார். அதே நேரம் ராம நாமத்தை எந்த காரணம் கொண்டும் விற்காதே” என்று கூறினார்.

பெரியவர் சொன்னாரே என்று அவனும் ஒரே ஒரு முறை கண்களை மூடி இறைவனை நினைத்து ராம நாமத்தைக் கூறினான். பின்னர் அதை மறந்து விட்டு, மீண்டும் கேலி கிண்டல் செய்தபடி வாழ்ந்தான். காலங்கள் சென்றது. அவன் தன் வாழ்நாள் முடிந்து இறந்து போனான். அவனது ஆன்மாவை இழுத்துபோய், எமதர்மனின் முன்பாக நிறுத்தினர், எமதூதா்கள்.

எமதர்மன், அவனது பாவ- புண்ணிய கணக்குகளை பரிசீலித்து விட்டு, “நீ ஒரே ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்திருக்கிறாய். அதற்காக உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்றார்.

அவனுக்கோ சுருக்கென்றது. ‘அட நான் எதை கேலி செய்தேனோ, அதுதான் உயர்ந்து நிற்கிறதே’ என வியந்தான். அப்போது ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’ என்று கூறியது நினைவுக்கு வந்தது. அதனால் கேட்பதற்கு பதிலாக, “ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்’ என்றான்.

அதைக் கேட்டு குழம்பிய எமதர்மன், ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது..’ என்று நினைத்து, “எங்களின் தலைவனான இந்திரன்தான், இதைத் தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்” என்றார்.

“உடனே அந்த நபர், “நான் பல்லக்கில்தான் வருவேன். என்னைத் தூக்கிச் செல்பவர்களில் தாங்களும் ஒருவராக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தான்.

எமதர்மன் யோசிக்கத் தொடங்கினார், ‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல் கிறான் என்றால், ராம நாமம் மிகுந்த மகிமை கொண்டதாக இருக்க வேண்டும். அதனால் தான் இப்படி எல்லாம் பேசு கிறான்’ என்று கருதியவர், அவன் அமர்ந்த பல்லக்கை தூக்கியபடி இந்திரனிடம் சென்றார்.

இவர்களின் பிரச்சினையைக் கேட்ட இந்திரனும், “ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; அறிவில் சிறந்த பிரம்மதேவரிடம் கேட்போம்.. வாருங்கள்” என்றார்.

உடனே அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன், எமதர்மனோடு சேர்ந்து, இந்திரனும் தன்னுடைய பல்லக்கை தூக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.

அவர்கள் இப்போது பிரம்மலோகம் சென்று, பிரம்மனிடம் தங்கள் சந்கேத்தை கேட்டனர். ஆனால் அவராலும் ராம நாம மகிமையை மதிப்பிட முடியவில்லை. “என்னால் அது இயலாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்” என்றார்.

ஆனால் பிரம்மனும் பல்லக்கு தூக்க வேண்டியதாயிற்று. அனைவரும் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டிருந்த மகா விஷ்ணுவிடம் சென்று, “இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக என்ன புண்ணியத்தை நாங்கள் தரவேண்டும் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும்” என்றனர்.

“இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?” என்று கேட்ட திருமால், பல்லக்கில் வந்த அவனின் ஆன்மாவை தன்னுடன் சேர்த்து அவனை முக்தியடையச் செய்தார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »