மீன்களாக மாறிய முனிவரின் 6 பிள்ளைகள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தண்ணீரை அசுத்தப்படுத்தக்கூடாது, அப்படிச் செய்தால் ஏற்படும் வினைகள் பற்றியும், முன்வினைகளால் ஏற்படும் துன்பங்களை விலக்கும் திருத்தலமாக திருச்செந்தூர் திகழ்வதையும் ஒரு புராணக்கதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதை இங்கே பார்ப்போம்.

பராசரர் என்ற முனிவருக்கு ஆறு பிள்ளைகள். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது படு சுட்டிகளாக இருந்தனர். ஒரு நாள் அவர்கள் அனைவரும் அருகில் இருந்த குளத்தில் குளித்தனர். அதோடு அந்த நீரை அசுத்தப்படுத்தும் விதமாகவும் செயல்பட்டனர். இதனால் அந்த நீருக்குள் இருந்த மீன்களும் மற்ற நீர்வாழ் உயிர்களும் வேதனை அடைந்தன.

இதனைக் கண்ட பராசர முனிவர், தன்னுடைய பிள்ளைகளிடம் “நீங்கள் இதுபோன்று நீரை அசுத்தம் செய்யக்கூடாது. அதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த நீரானது இதனுள் வாழும் உயிர்களுக்குச் சொந்தமானவை. அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம். அவ்வளவுதான்” என்று எச்சரித்தார்.

ஆனாலும் அவர்கள் தந்தையின் சொல்லை கேட்காமல், முன்புபோல அந்த நீரை அசுத்தப்படுத்தியபடியே இருந்தனர். இதனால் கோபம் கொண்ட பராசர முனிவர், தன் பிள்ளைகள் என்றும் பாராமல், அவர்களை மீன்களாக மாறும்படி சாபமிட்டார்.

மீன்களாக மாறியதும்தான், அவர்களுக்கு தங்களின் தவறு புரிந்தது. அவர்கள் தங்களின் தந்தையிடம், “எங்களின் சாபம் தீர என்ன வழி” என்று கேட்டனர்.

அதற்கு பராசர முனிவர், “பார்வதி தேவியின் அருளால் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.

இதையடுத்து மீன்களாக மாறிய முனிவரின் புத்திரர்கள் ஆறுபேரும், அந்த குளத்தில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம் கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, சிறுவனான முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது அதில் இருந்து ஒரு சொட்டு பால், பூலோகத்தில் பராசர முனிவரின் பிள்ளைகள் மீன்களாக இருந்த குளத்தில் விழுந்தது. அதனை அந்த மீன்கள் அருந்தியதால், அவர்கள் ஆறு பேரும் முனிவர்களாக மாறினர்.

பின்னர் அந்த 6 பேரும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவரை வழிபட்டனர். அப்போது “நீங்கள் 6 பேரும் திருச்செந்தூர் சென்று தவம் புரியுங்கள். முருகப்பெருமான் வந்து உங்களுக்கு அருள்புரிவார்” என்ற அசரீரி ஒலித்தது.

இதையடுதுத் அவர்கள் அனைவரும் திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று கடும் தவம் மேற்கொண்டனர். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்திரத்துடன் கூடிய நிறைந்த பவுர்ணமி நாளில், அவர்கள் ஆறு பேருக்கும் காட்சியளித்த முருகப்பெருமான், அவர்களின் முன்வினைகள் அகல அருள்புரிந்தார்.

இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில், திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாட்கள் நடைபெறும் பெருவிழாவில், பராசர முனிவரின் பிள்ளைகளுக்கு, முருகப்பெருமான் அருட்காட்சி கொடுத்த நிகழ்வு நடத்தப்படும். அன்றைய தினம் திருச்செந்தூர் திருத்தலம் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால், நம் வாழ்வில் முன்வினைப் பயனால் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »