கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கோவை மாநகரம் விளாங்குறிச்சி வெங்கடாஜலபதி நகரில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இங்கு கற்பக விநாயகர், பாலமுருகன், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, கல்விக்கு அதிபதியான பிரம்மகி, மகேஸ்வரி, வைஷ்ணவி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளனர்.

தினமும் காலை 7 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு நித்திய பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணியளவில் நடை அடைக்கப்படுகிறது. மாலை 6 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. இந்த கோவிலின் தலவிருட்சம் வேம்பு ஆகும்.

இந்த கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களில் அம்மனுக்கு, சந்தனம், மஞ்சள், பால் தயிர் தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

கருமாரியம்மன் சர்ப்ப ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக கூறப்படுகிறது. குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு எலுமிச்சை பழம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டால் அவர்களது நோய் குணமாகு வதாக கூறப்படுகிறது.

இதேபோல் திருமணத் தடை அகல ராகு கால பூஜை செய்யப்படுகிறது. மேலும் தொழில் விருத்தி அடைய அம்மன் பாதத்தில் எலுமிச்சம்பழம் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

கருமாரியம்மன் அருளால் குழந்தைப்பேறு பெற்ற தம்பதியினர் மற்றும் தோஷம் நீங்கி திருமணமான மணமக்கள் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. தீராத நோயால் அவதிப்பட்டவர்கள் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதை நாம் காணலாம்.

நவக்கிரக நாயகியாக கருமாரியம்மன் திகழ்வதால் ராகு தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனுக்கு அபிஷகம் செய்து வழிபடுகிறார்கள். இதன் மூலம் அவர்களது தோஷம் நீங்கி வாழ்வில் நலம் பெற்று செல்கிறார்கள். இந்த கோவிலில் நடைபெறும் சண்டி ஹோமம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி மாதத்தன்று 5 வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வெவ்வேறு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சிதருவார். இதனை காண கண் கோடி வேண்டும்.

தற்போது கோவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பல ஆண்டுகள் முன்பு வேப்ப மரத்தடியில் சுயம்புவாக அம்மன் தோன்றியுள்ளார். இதையொட்டி கோவில் கட்ட பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது சிலர் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்றும், சிலர் அம்மனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையொட்டி விநாயகர் மற்றும் கருமாரியம்மனுக்கு தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டது. கற்பக விநாயகர் கிழக்கு நோக்கியும், மூலவரான கருமாரியம்மன் வடக்கு திசை நோக்கியும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பூச்சாட்டு பெருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறும். விழாவையொட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வழியாக சக்தி கரகம், துணை கரகம், விளையாட்டு கரகம், அக்னி கரகம், மாவிளக்கு, முளைப்பாரி ஆகியவற்றை பக்தர்கள் மேள தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக செல்வார்கள். அதன்பிறகு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து செல்வார்கள்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »