ஒளவையார் அருளிச்செய்த விநாயகர் அகவல்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்

மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழ்ஒளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்

பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா வுபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து

இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலம்ஒரு நான்கும் தந்தெனக் கருளி
மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அதைப்பதும் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழிமுனைக் கபாலமுங் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்து

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முக தூலமும் சதுர்மிக சூக்கமும்

எண்முக மாக இனிதெனக் கருளிப்
புரியெட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினிற் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக் கருளி

என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்க்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »