ஆதிசங்கரரின் சீடரான அமரசிம்மர்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஆதிசங்கரர், பல ஊர்களுக்கும் யாத்திரையாகச் சென்று தன்னுடைய வேதாந்த சித்தாந்தத்தை எடுத்துரைத்து வந்தார். அவர் வாழ்ந்த அதே காலகட்டத்தில், அமரசிம்மர் என்பவரும் வாழ்ந்தார். அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர். அதில் கைதேர்ந்த அவர் பல நூல்களையும், காவியங்களையும் படைத்திருந்தார். சமண மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாஸ்திரங்களில் நல்ல தேர்ச்சி பெறவும், வாதங்களில் வெற்றிபெறவும், சரஸ்வதி தேவியை ரகசியமாக வழிபாடு செய்து வந்தார், அமரசிம்மர்.

அவரது வழிபாட்டில் மகிழ்ந்து போன சரஸ்வதி தேவி, அமரசிம்மருக்கு அருள்புரிந்து வந்தாள். அதனால் எல்லா வாதங்களிலும் அமரசிம்மர் வெற்றியை மட்டுமே பெற்று வந்தார்.

இந்த நிலையில் அமரசிம்மரைப் பற்றி அறிந்த ஆதிசங்கரர், மிகவும் புகழ்பெற்றவராகத் திகழும் அமரசிம்மருடன் வாக்குவாதம் செய்வது என்று முடிவு செய்தார். அதன் மூலம் தன்னுடைய வேதாந்த சித்தாந்தப் பிரசாரத்திற்கு வலிமை சேரும் என்று நினைத்தார், ஆதிசங்கரர். எனவே அமரசிம்மரை, தன்னுடன் வாதம் செய்ய வரும்படி அழைத்தார்.

அதற்கு ஒப்புக்கொண்ட அமரசிம்மர் ஒரு நிபந்தனையை விதித்தார். “சங்கரரே.. நான் உங்களுடைய அழைப்பை ஒரு நிபந்தனையுடன் ஏற்கிறேன். வாதிடும் போது, நான் ஒரு திரையின் பின்பக்கம் இருந்துதான் வாதம் செய்வேன். அதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.

ஆதிசங்கரருக்கு ‘அதில் என்ன இருக்கிறது’ என்ற எண்ணம். அதனால் அவரது நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவருக்கு மான வாக்குவாதம் தொடங்கியது. ஆதிசங்கரர் கேட்ட பல கடினமான கேள்விகளுக்கு, அமரசிம்மர் சர்வ சாதாரணமாக பதில்களை வழங்கிக்கொண்டிருந்தார். அதைக் கண்டு பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார், ஆதிசங்கரர். ‘இது எப்படி சாத்தியம்..’ என்ற வியப்பும் அவருக்குள் ஏற்பட்டது.

‘எனது கேள்விகளுக்கு சாதாரண மனிதர் களால் பதில் அளிக்க முடியாது. எனவே அமரசிம்மரிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது’ என்று நினைத்த ஆதிசங்கரர், ஒரு நிமிடம் தன் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்போது திரையின் மறைவில் இருந்த ஒரு குடத்தில், அமரசிம்மர் வாக்குதேவதையான சரஸ்வதியை எழுந்தருளச் செய்திருப்பது, சங்கரரின் மனதிற்குள் வந்துபோனது. அவர் கேட்ட கேள்விகளுக்கு சரஸ்வதி தேவியே இதுவரை பதில் அளித்துக் கொண்டிருந்தாள் என்பதையும் சங்கரர் அறிந்துகொண்டார். இதை அவர் அறிந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், அமரசிம்மர் தங்களுக்கு இடையில் ஒரு திரையை கட்டினார்.

ஆதிசங்கரர் இப்போது சரஸ்வதி தேவியை நினைத்து தியானிக்கத் தொடங்கினார். “தாயே.. நான் வேதாந்த சித்தாந்தங்களை நிலைநாட்டுவதற்கு, தாங்களே எனக்கு உதவ வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தார். சங்கரர் அப்படி பிரார்த்தனை செய்ததும், அவருக்கும், அமரசிம்மருக்கும் இடையில் இருந்த திரை கீழே விழுந்தது. குடத்தில் எழுந்தருளியிருந்த சரஸ்வதி தேவியும் மறைந்து போனாள்.

அதன்பிறகு ஆதிசங்கரர் கேட்ட எந்த கேள்விக்கும், அமரசிம்மரிடம் இருந்து பதில்வரவில்லை. அமரசிம்மர் தோல்வியைத் தழுவினார். வாதம் முடிந்ததும் சங்கரர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார். அந்த அவமானம் தாங்க முடியாமல், அமரசிம்மர் அக்கினி வளர்த்து தீக்குளிக்க முடிவு செய்தார். முன்பாக தான் எழுதிய பல நூல்களையும், காவியங்களையும் தீயில் இட்டு எரித்தார். கடைசியாக அவரும் தீயில் இறங்க சித்தமானார்.

அதற்குள் இதுபற்றி கேள்விப்பட்டு அங்கு வந்த சங்கரர், அமரசிம்மர் தீயில் இறங்குவதைத் தடுத்து நிறுத்தினார். மிகவும் மனம் நெகிழ்ந்து போன அமரசிம்மர், பிற்காலத்தில் ஆதிசங்கரரின் சீடராக மாறிப்போனார்.

இருவருக்கு இடையே கருத்து மோதல் இருக்கலாம். ஆனால் அதனால் யாருக்கும் துன்பம் நேர்ந்துவிடக்கூடாது. அதன் காரணமாகத்தான் அமரசிம்மரை தடுத்தாட்கொண்டார், ஆதிசங்கரர்.

About the author

Related

சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading

JOIN THE DISCUSSION

Translate »