இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் “சங்கடஹர சதுர்த்தி”. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வருவது தான் சங்கடஹர சதுர்த்தி தினமாகும். ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்வதை தொடங்க வேண்டும். இதிலிருந்து மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து 11 சங்கடஹர சதுர்த்தி தின விரதம் அனுஷ்டித்து சதுர்த்தி விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று, அங்கிருக்கும் பிள்ளையார் சந்நிதிக்கு சென்று, அச்சந்நிதியை 11 முறை வலம் வந்து வழிபட வேண்டும். பின்பு விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து வழிபட்ட பின்பு நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.

வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, உங்கள் வீட்டில் இருக்கும் பசுமாட்டிற்கோ அல்லது வெளியில் திரியும் ஏதேனும் ஒரு பசுமாட்டிற்கோ உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி விரத தினத்தன்றும் பசுமாட்டிற்கு உணவு கொடுப்பதால் விரதத்திற்கு பலன் அதிகரிக்கும். பின்பு வீட்டிலேயே விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை, இனிப்பு, சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல், சுண்டல் என்று பலவிதமான உணவு பொருட்களை விநாயகருக்கு நைவேத்தியம் வைத்து, விநாயகருக்குப் பிடித்த வன்னி இலைகளால் விநாயகரை அர்ச்சித்து, விநாயகருக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் கூறி வழிபட வேண்டும்.

இந்த சதுர்த்தி விரத தினத்தன்று உணவேதும் அருந்தாமல் இருப்பது சிறப்பு. அது முடியாவிட்டால் பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும்.வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி, அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் பிரசாதமாக எடுத்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிட்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும். ஓவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »