நாரதரும்… அனுமனும்…


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ராம அவதாரம் முடிந்து, ராமபிரான் வைகுண்டம் சென்றுவிட்டார். அவர் தன்னுடன் வருமாறு அழைத்தபோதும், ராம கீர்த்தனம் கேட்டபடி பூமியிலேயே இருக்க விரும்புவதாக கூறிவிட்டார், அனுமன். அப்படி அவர் பூமியில் இருந்த ஒரு சமயம் இமயமலையில் அமர்ந்து ராம நாமத்தை உச்சரித்தபடி, ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அப்போது மூவுலகங்களுக்கும் செல்லும் சக்தி படைத்த நாரத முனிவர் அங்கு வந்தார். அவர் தன் கையில் இருந்த தம்புராவை மீட்டியபடியும், பஜனை கட்டையை அடித்தபடியும், சத்தமாக “நாராயணா.. நாராயணா..” என்று சொல்லியபடி அனுமனின் பக்கத்தில் வந்து நின்றார். ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் நாரதரின் வருகையோ, அவர் பாடிய நாராயண கீர்த்தனையோ அனுமனின் காதில் விழவில்லை.

நாரதர், அனுமனின் காதருகே சென்று ‘நாராயணா..’ மந்திரத்தை சத்தமாக உச்சரித்தார். இந்த மந்திர உச்சரிப்பு இமயமலையையே நடுங்கச் செய்வதாக இருந்தது. இதனால் கண் விழித்த அனுமன், தன் அருகில் நிற்கும் நாரதரைப் பார்த்து வணங்கினார்.

நாரதர் அனுமனைப் பார்த்து, “நான் வந்ததும், நாராயணா என்று நாம கீர்த்தனம் பாடியதும் தெரியாமல், அப்படியென்ன ராம கீர்த்தனையின் மூழ்கியிருக்கிறாய். என்னுடைய நாராயண மந்திரம் சிறந்ததா?. இல்லை உன்னுடைய ராம மந்திரம் சிறந்ததா? என்று பார்த்துவிடுவோமா” என்று வம்புக்கு இழுத்தார்.

அனுமனும் நாரதரின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

தன் தம்புராவை மீட்டியபடி நாராயண மந்திரத்தை உச்சரித்தார், நாரதர். சில நொடிகளில் மலையில் இருந்த பனிக்கட்டிகள் எல்லாம் உருகி நீராக ஓடத் தொடங்கியது. இப்போது அனுமனை பெருமையாகப் பார்த்த நாரதர், “உன்னால் இதுபோன்று ராம நாமத்தை உச்சரித்து, பனிக்கட்டிகளை உருகி ஓடச் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு அனுமன், “நாரதரே.. உங்களால் நாராயண மந்திரத்தை உச்சரித்து, மீண்டும் இந்த நீரை பனிக்கட்டியாக மாற்ற முடியுமா?” என்றார்.

நாரதர், “இதுவெல்லாம் சாதாரணம்” என்றபடி தம்புராவை மீட்டி, நாராயண மந்திரத்தை உச்சரித்தார். ஆனால் நீர், பனிக்கட்டிகளாக மாறவில்லை. எவ்வளவு நேரம் கஷ்டப்பட்டும், அவரால் அந்தச் செயலைச் செய்ய முடியவில்லை. இதனால் தன்னுடைய தோல்வியை நாரதர் ஒப்புக்கொண்டார்.

இப்போது அனுமன், “ராம நாமத்தை உச்சரித்து, நான் இந்த நீரை பனிக்கட்டிகளாக மாற்றுகிறேன்” என்று கூறி, ராம நாமத்தை சொல்லத் தொடங்கினார். சிறிது நேரத்திலேயே தண்ணீர் அனைத்தும் பனிக்கட்டிகளாக மாறிவிட்டது.

அனுமன் “இப்போது எது சிறந்தது என்று புரிந்ததா நாரதரே?” என்றார்.

“புரிந்தது அனுமன், நாராயணனும், ராமனும் ஒருவரே என்பதை நான் உணர்ந்துகொண்டேன். திருப்பாற்கடலில் எதுவும் தெரியாததுபோல் படுத்திருக்கும் அந்த பரந்தாமனைக் காணத்தான் இப்போது செல்லவிருக்கிறேன்” என்றபடி, வைகுண்டம் சென்ற நாரதர், அங்கு பாம்பணையில் படுத்திருந்த நாராயணரை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »