உலகநாயகி அம்மன் கோவில்- தேவிபட்டினம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவிபட்டினம் ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது மஹிஷமர்த்தினி எனும் உலகநாயகி அம்மன் கோவில். இந்த கோவில் தேவிபட்டினம் என்று அழைக்கப்படுகிறது. அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.

முதலாம் ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என இவ்வூரில் வீற்றிருக்கும் அம்மன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டியுள்ள ஊர்களை குறிப்பதாலும் இது கடற்கரையை ஒட்டியிருப்பதாலும் தேவிபட்டினம் என அழைக்கப்படுகிறது. தேவி பட்டினம் என்றாலே அனைவருக்கும் ராமர்  கடலுக்குள் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்கள் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ராமர் ராவணனை வதம் செய்ய இலங்கை செல்லும் முன்  இங்குள்ள  உலகநாயகி அம்மனை வழிபட்டு சென்றுள்ளார்.

பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக எடுத்த அவதாரமே, துர்க்கை அல்லது காளி. மகிஷாசுரன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். எருமை போல உருமாறும் சக்தி கொண்ட இவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அளவில்லா துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவனை அழிப்பதற்காக பராசக்தி, திரிகுணா என்ற பெயரில் தோன்றினாள்.

இவளுக்கு சிவபெருமான் சூலத்தையும், திருமால் சக்கரத்தையும், பிரம்மா கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், அக்னியும், வருணனும் சக்தியையும், வாயு வில்லையும், ஐராவதம் மணியையும், எமன் தண்டத்தையும், நிருருதி பாசத்தையும் கொடுத்தார்கள். தவிர, காலன் கத்தி, கேடயத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், குபேரன் பான பாத்திரத்தையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும்  அளித்தார்கள்.

ஹிமவான் சிம்ம வாகனமானான். சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி சிம்ம வாகனத்தில் சென்று மகிஷனை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். மகிஷனை அழித்த அவள் கோபம் குறைந்து சாந்த நிலையில் சுயம்பு வடிவில் இத்தலத்தில் அருட்பாலிக்கிறாள். இந்த உலகை காப்பதற்காக மகிஷாசுரனுடன் 9 நாள் போராடி பத்தாம் நாள் வெற்றி பெற்று இங்கு ஓய்வு எடுக்க சயன கோலத்தில் சுயம்புவாக உலகநாயகி என்ற திருநாமத்துடன் தங்கியதாகவும், சொல்லப்படுகிறது.

நவராத்திரி நாயகியான இந்த தேவியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தல அம்மனுக்கு உருவம் ஏதும் கிடையாது. எதற்கெடுத்தாலும் பயப்படுபவர்கள், மன தைரியம் இல்லாதவர்கள், எதிரி தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வீரசக்தி பீடமான உலக நாயகி அம்மன் ஆலயத்துக்கு சென்று வணங்கி நல்லருள் பெறலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »