அமாவாசை விரத சிறப்புகள் என்ன? அமாவாசை பற்றிய அத்தனை சந்தேகங்களுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டுமா?


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பொதுவாக அமாவாசை என்பது பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தை மற்றும் ஆடி அமாவாசை மட்டுமல்ல, அனைத்து மாதங்களிலும் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களின் ஆசி கிட்ட விரதம் மேற்கொள்கின்றனர். இந்த விரதத்தை யாரெல்லாம் மேற்கொள்ள வேண்டும்? அமாவாசை ஏன் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாக இருக்கிறது? பெண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்வது சரியா? தவறா? பெண்கள் எப்போது அமாவாசை விரதம் மேற்கொள்ள வேண்டும்? தர்ப்பணம், சிரார்த்தம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? ஒருவர் இறந்த அதே நாளில் ஏன் சிரார்த்தம் செய்யப்படுவதில்லை? இது போன்ற பல அமாவாசை குறித்த சந்தேகங்களுக்கு இந்த பதிவின் மூலம் விடையை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

தர்ப்பணம்-சிரார்த்தம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? தர்ப்பணம் கொடுப்பதும் சிரார்த்தம் செய்வதும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்று அல்ல. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு மாத அமாவாசை தினத்திலும் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து, பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், வெல்லம் கலந்த அரிசி உணவை கொடுத்து, முன்னோர்களின் படத்திற்கு முன்னால் படையல் போட்டு வழிபட்டு, பின்னர் காக்கைக்கு சோறு வைத்து விட்டு அதன்பின் நாம் உணவருந்துவது வழக்கமாக செய்ய வேண்டும். சிரார்த்தம் என்பது ஒருவரின் இறப்பிற்கு பிறகு அவர் இறந்த அதே திதியில் வருடா வருடம் கோவில்களில் அல்லது வீட்டிலேயே வழிபாடு செய்வது சிரார்த்தம் என்பதாகும்.

திதி எப்படி பார்க்க வேண்டும்? ஒருவர் இறந்த பிறகு அவர் இறந்த அந்த நாளில் வரும் திதியானது, அதற்கு அடுத்த வருடத்தில் அவர் இறந்த அதே நாளில் வருவதில்லை. சிலநாட்களுக்கு முன்னாலும் அல்லது பின்னாலும் அந்தத் திதி வரும். அந்த நாளில் தான் இறந்தவர்களை நினைத்து நாம் சிரார்த்தம் செய்ய வேண்டும். அவர் இறந்த நாளை விட, அவர் எந்த திதியில் இருக்கிறாரோ அந்தத் திதியில் சிரார்த்தம் செய்வது தான் முறையாகும்.

பெண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்வது சரியா? தவறா? பெண்கள் அமாவாசை விரதத்தை மேற்கொள்ளக்கூடாது. திருமணமான ஒரு பெண்ணுக்கு தாய் தந்தை இருவரும் இல்லை என்றாலும் அவருக்கு கணவர் இருக்கும் பட்சத்தில் அவர் அந்த விரதத்தை மேற்கொள்ள கூடாது. அப்படி என்றால் பெண்கள் எப்போது அமாவாசை விரதத்தை மேற்கொள்ள வேண்டும்? கணவர் இல்லாத பெண்கள் கணவரை நினைத்து அமாவாசை விரதத்தை மேற்கொள்ளலாம்.

அமாவாசை விரதத்தை யாரெல்லாம் மேற்கொள்ள வேண்டும்? தந்தை இல்லாத ஆண், தாய் இல்லாத ஆண் அல்லது இருவரும் இல்லாத ஆண்மகன் நிச்சயம் அமாவாசை விரதம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய நாளில் உபவாசமிருந்து எள்ளும் தண்ணீரும் இரைப்பது அவர்களின் கடமையாகும். ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் மனைவிக்காக கணவரும், கணவருக்காக மனைவியும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். தாய், தந்தை, சகோதரர்கள் இந்த மூவரும் இல்லாத பெண்கள் கோவில்களில் அவர்களை நினைத்து அன்னதானம் அளிக்கலாம். அல்லது வீட்டிலேயே இலை போட்டு முடிந்தவர்களுக்கு உணவளிக்கலாம்.

ஏன் அமாவாசை பித்ருக்களுக்கு உகந்தது? அமாவாசை அன்று சர்வ கோடி லோகங்களில் இருக்கும் அத்தனை பேரும் பூமிக்கு வந்து புண்ணிய நதிகளில், சமுத்திரங்களில் நீராடுவதாக சாஸ்திரங்கள் வெளிப்படையாக கூறுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ லோகங்கள் இருக்கின்றன. அதில் மகரிஷிகளும், முனிவர்களும், தேவதைகளும், நம் பித்ருக்களும் அடங்குவர். இப்படியாக இருக்கும் அத்தனை லோகங்களில் இருந்தும் அமாவாசை நாளில் பூமிக்கு வருவதால் அன்றைய நாளை மனிதர்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அதனால் தான் பித்ருக்களுக்கு அன்றைய நாளில் தர்ப்பணமும் செய்கின்றனர். இந்த உலகத்தில் நம்மை விட்டு அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுடைய ஆன்மா இன்னுமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்துமத சாஸ்திரங்களை பின்பற்றுபவர்கள் நம்பி வருகின்றனர். அவர்கள் பூமிக்கு வரும் அந்த நாளில் அவர்களை நினைத்து நாம் செய்யும் வழிபாட்டு முறைகள் அவர்களின் ஆசியை நமக்குப் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாகும். அமாவாசை அன்று இஷ்ட தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் நட்சத்திர அதிதேவதைகளுக்கும் வழிபாடுகள் செய்து பலனடையலாம்.

சிறப்பு அமாவாசை: ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்து சென்றாலும் தை மாதத்தில் வரும் தை அமாவாசையும், ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும், புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் இந்த தினங்களில் தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியை முழுமையாக பெற்றுக் கொள்ளலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »