நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஐப்பசி திருவிழா. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் ஐப்பசி திருவிழா தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. திருவிழாவை வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்த வேண்டுமென நெல்லை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளாக பிரார்த்தனை செய்து நூதன முறையில் போராட்டம் நடத்துவது என இந்து முன்னணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் பிரமநாயகம், சுடலை, செல்வராஜ், ராஜா செல்வம், நமச்சிவாயம் மற்றும் சிவ பக்தர்கள் நேற்று காலை நெல்லையப்பர் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் முன்பு தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர்.

அப்போது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகாரிகள் தரப்பில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமராஜ், நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள், நெல்லை டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோரும், அரசியல் கட்சிகள் சார்பில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், நெல்லை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகாராஜன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், சமத்துவ மக்கள் கட்சி நெல்லை மாவட்ட பொறுப்பாளர் நட்சத்திர வெற்றி, தி.மு.க. சார்பில் உலகநாதன், பக்தர் பேரவை மாவட்ட அமைப்பாளர் குணசீலன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராம்ராஜ் கூறியதாவது:-

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஐப்பசி திருவிழாவை இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து பூஜைகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறும். வருகிற 11-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்படும். வழக்கமாக தபசு காட்சி, காட்சி மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆண்டு தபசு காட்சியை காட்சி மண்டபத்தில் வைத்து நடத்துவதா? அல்லது கோவில் உள்பிரகாரத்தில் நடத்துவதா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்போம். திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து இந்து முன்னணியினர், சிவபக்தர்கள் தொடர் பிரார்த்தனையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு பந்தல்கால் நாட்டு வைபவத்தை தொடர்ந்து கொடியேற்றம் அம்மன் சன்னதியில் நடைபெறுகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் நடைபெறும் அபிஷேகம், ஆராதனை மற்றும் கோவில் வளாகத்திற்குள் வைத்து நடைபெற உள்ள சுவாமி, அம்பாள் புறப்பாடு ஆகியவற்றையும், அம்மன் தபசுக்காட்சி, திருக்கல்யாண காட்சி ஆகியவற்றையும் யூடியூப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »