சபரிமலை கோவிலில் மண்டல, மகரவிளக்கு தரிசனத்துக்கு ஒரே நாளில் முன்பதிவு முடிவடைந்தது


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை காண ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐப்பசி மாத பூஜைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன், வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாளான 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் மாதம் 26-ந்தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் படி நடப்பு ஆண்டில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை தரிசனத்திற்கு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினசரி ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்கள் வீதமும், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் வீதமும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட இந்த மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். மேலும் மருத்துவ காப்பீடு அட்டையும் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குளிப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். முந்தைய ஆண்டுகளை போல் பக்தர்கள் நேரடியாக நெய் அபிஷேகம் செய்ய முடியாது.

ஆனால் அபிஷேகத்திற்கான நெய் பாத்திரங்களை அதற்காக அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு கவுண்ட்டரில் ஒப்படைக்க வேண்டும். அபிஷேகத்திற்கு பின் நெய் பாத்திரம் பக்தர்களுக்கு வழங்கப்படும். வழக்கம் போல் அரவணை, அப்பம் ஆகியவை சிறப்பு கவுண்ட்டர்கள் மூலமாக விற்பனை செய்யப்படும்.

மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே சீசன் முழுமைக்குமான தரிசன முன் பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »