திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. பிரம்மோற்சவ விழா நடத்துவது குறித்து திருமலை கோவில் துணை அதிகாரி பசந்த் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவில் அதிகாரி ஜான்சிராணி, தேவஸ்தான என்ஜினீயர் ரமேஷ் ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் துணை அதிகாரி பசந்த் குமார் கூறியதாவது:-

பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஏகாந்தமாக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை மற்றும் இரவில் மாடவீதிகளில் நடக்கும் வாகன வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள் மட்டுமே வாகன வீதிஉலா நடக்கும்.

பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் அவர்களின் வசதிக்காக நகரின் முக்கிய இடங்களில் அகண்ட திரை மூலம் விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கார்த்திகை பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About the author

Related

Translate »