அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

மூலவர்     –     ஆதிவராகப்பெருமாள்
உற்சவர்     –     ஆதிவராகர்
தாயார்     –     அம்புஜவல்லி

தீர்த்தம்     –     வராகதீர்த்தம்
ஆகமம்/பூசை     –     பாஞ்சராத்ரம்
பழமை     –     500-1000 வருடங்களுக்கு முன்
ஊர்     –     கும்பகோணம்
மாவட்டம்     –     தஞ்சாவூர்
மாநிலம்     –     தமிழ்நாடு

ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே இவர், இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். எனவே இவரை,”ஆதிவராகர்” என்று அழைக்கின்றனர். இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர். மாசிமகத்திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

பிரசாத விசேஷம்: மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். தினமும் இவருக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு.

இந்தக்கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

சுவாமி அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக “வராக சாளக்கிராமம்” உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் இருப்பது உள்ளன. தினமும் இதற்கு பாலபிஷேகம் நடக்கிறது.

முன்மண்டபத்தில் விஷ்வக்ஸேனர், நிகமாந்த தேசிகர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் துளசி மாடத்தின் கீழ் நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். வராக தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. இக்கோயிலுக்கு சிறிது தூரத்திலேயே ஆதிகும்பேஸ்வரர் கோயில் மற்றும் 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்கள் உள்ளன.

காலை 8 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து புத்தாடை சாற்றி வழிபடுகின்றனர்.

வழிகாட்டி :

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் இத்தலம் இருக்கிறது. ஆட்டோ, கார்களில் செல்லலாம்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »