பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாகாப்பு கட்டுதலுடன் தொடங்கியது


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அறுபடை வீடுகளில், 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா, மலைக்கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. முன்னதாக மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில் பிராயச்சித்த யாகம் நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாக திருவிழா நடைபெறவில்லை. இதன் காரணமாக நேற்று நடந்த கந்தசஷ்டி திருவிழாவில் பிராயசித்த யாகம் என்ற சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்பு உச்சிக்கால பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு காப்பு கட்டு நடந்தது.

பின்னர் கருவறையில் உள்ள விநாயகர், மூலவர், உற்சவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயில், வேல், கொடிமரம் மற்றும் நவவீரர்கள் ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டு நடைபெற்றது. கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி, சுந்தரமூர்த்திசிவம் ஆகியோர் காப்பு கட்டுக்கான பூஜைகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கிராந்திகுமார் படி, துணை ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் பொறியாளர்கள் பாலாஜி, குமார் உள்ளிட்ட கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காப்பு கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் நேற்று பக்தர்களுக்கு காப்பு கட்டு நடைபெறவில்லை.

7 நாட்கள் நடக்கும் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. 6-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி சூரசம்ஹாரமும், 7-ம் திருநாளான 21-ந் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. வழக்கமாக சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள், மண்டகப்படி தாரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யுடியூப் சேனல்களில் மேற்கண்ட நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மலைக்கோவில், திருஆவினன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

கந்தசஷ்டி விழாவுக்காக ஆண்டுதோறும் மலைக்கோவிலுக்கு, கோவில் யானை கஸ்தூரி செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை 6 மணி அளவில், யானைப்பாதை வழியாக யானை கஸ்தூரி மலைக்கோவிலுக்கு சென்றது. காப்பு கட்டு நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் காலை 8 மணி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்து. இருப்பினும் விடுமுறை தினம் என்பதால், நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருந்தது.

இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி கந்த சஷ்டி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி விழாவின் போது செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நடத்தப்படும் என்றனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »