திருப்பரங்குன்றம் கோவிலில் சண்முகப் பெருமானுக்கு பசுமை அலங்காரம்


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 15-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சாமிக்கு தினமும் ஒரு அலங்காரம் நடக்கிறது. இதேபோல சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு ஒரே வேளையில் 6 சிவாச்சாரியார்கள் மலர்கள் தூவி சகஸ்ர நாம பூஜை செய்து வருகின்றனர்.

மேலும் சுவாமிக்கு 6 வகையான சாதம் படைத்து விசேஷ பூஜை நடந்து வருகிறது. இது தவிர சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத சண்முக பெருமானுக்கு 6 சிவாச்சாரியார்கள் சம காலத்தில் மகா தீப, தூப ஆராதனை செய்து வருகின்றனர். அவை கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் 3-ம் நாளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.

நாடு முழுவதும் மழை பெய்து விவசாயம் செழித்திடும் விதமாக சண்முகப் பெருமானுக்கு பசுமை அலங்காரம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று காலையில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு பசுமையை குறிக்கும் பச்சை அலங்காரம் செய்யப்பட்டது. அதில் சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு பச்சைநிற பட்டு சாற்றப்பட்டு துளசி மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.

கந்தசஷ்டி திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி சூரசம்ஹார லீலை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள்ளேயே சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதையொட்டி அன்று காலையில் வழக்கம் போல 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சுமார் ஒரு மணிநேரம் கோவிலுக்குள் சூரசம்ஹார லீலை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து 5.30 மணி முதல் 6 மணி வரை திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்காக அனுக்ஞை, வாஸ்து சாந்தி நடக்கிறது. இதையடுத்து உற்சவர் சன்னதியில் கந்தசஷ்டியையொட்டி சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு மாலை மாற்றுதல், தீபாராதனை நடக்கிறது.

அதன் பின் மேள தாளங்கள் முழங்க சுவாமி அம்பாளுடன் 2-வது முறையாக திருவாட்சி மண்டபத்தை வலம் வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மாலை 6.30 மணிக்கு மேல் கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்துள்ளார்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »