ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் முன் கோவில் தங்க கொடிமரம் அருகே உத்தம நம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன்னாள் 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே காத்திருக்க இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

நம்பெருமாள் சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர் நந்தவனம் தோப்பு வழியாக தாயார் சன்னதிக்கு சென்றார். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றார். அங்கு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15-க்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

About the author

Related

JOIN THE DISCUSSION

Translate »